ஜெர்மனி நாட்டில் உள்ள கேரள சமாஜம் ஏற்பாடு செய்திருந்த உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி பரிமாறப்பட்டதை தடுக்க விஷ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த குண்டர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதற்கு பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளது.
ஜெர்மனியில் ஃபிராங்பர்ட் இந்திய தூதரகம் ‘இந்தியன் பெஸ்ட்’ என்கிற விழாவை நடத்தியது. இதன் ஒரு பகுதியாக கேரள சமாஜம் உணவுத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி கேரள உணவின் பகுதியாக உள்ள பரோட்டாவும் மாட்டிறைச்சியும் உணவுப்பட்டியலில் இடம் பெற்றிருந்தது.
இந்த உணவுப்பட்டியிலை பார்த்த வட இந்தியாவைச் சேர்ந்த விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாட்டிறைச்சி இந்து பண்பாட்டுக்கு எதிரானது என்று கூறி நிகழ்ச்சி நடத்தும் அமைப்பினரிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து தூதரக அதிகாரிகள் தலையிட்டு மாட்டிறைச்சியை உணவுப் பட்டியலிலிருந்து நீக்குமாறு கேரள சமாஜ நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டனர்.
இதனால் அதிருப்தி அடைந்த கேரள சமாஜம் விழாவை புறக்கணித்தது. மதத்தின் பெயரால் வெறுப்பை உமிழும் வி.எச்.பி-யின் நடவடிக்கைக்கு எதிராக ஃபிராங்பர்ட்டில் உள்ள மலையாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கேரள சமாஜம் நிர்வாகி ஒருவர் கூறுகையில், பன்முகத் தன்மை உடைய இந்தியாவை பாசிச பா.ஜ.க ஆட்சி செய்வது துரதிஷ்டமானது. அதுமட்டுமின்றி இந்துத்துவா கும்பல் வெளிநாடுகளிலும் அவர்கள் சித்தாந்தத்திற்கு எதிரான நடவடிக்கையில் யாரேனும் ஈடுபட்டால் வன்முறையின் மூலம் அதனைத் தடுக்கும் முயற்சியை செய்து வருகின்றனர்.
இப்போது கூட எங்கள் விருப்பமான உணவை மதச் சாயம் பூசி தடுத்துள்ளனர். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. வி.எச்.பி-யின் பாசிச நிலைபாடுக்கு எதிராக வலுவான போராட்டம் நடத்தப்படும்” என அவர் தெரிவித்துள்ளனர்.