இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தினேஷ் சாவ்லா. இவர் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் தனது சகோதரருடன் இணைந்து சாவ்லா ஹோட்டல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் குடும்பத்தினருக்கு சொந்தமான ஹோட்டல்களில் பார்ட்னராக இருந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் மெம்பிஸ் விமான நிலையத்தில் திருட்டில் ஈடுபட்டதாக தினேஷ் சாவ்லா கைது செய்யப்பட்டுள்ளார். இவர் விமான நிலையத்தில் இருந்து 2 லக்கேஜுகளை திருடியுள்ளார். திருடிய லக்கேஜுகளை தனது காரில் வைத்து விட்டு பயணம் செய்வதற்காக மீண்டும் விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டார்.
அவரது காரில் சோதனை நடத்தியபோது, திருடப்பட்ட சூட்கேஸுடன், முன்னர் திருடிய சூட்கேசின் சில பாகங்களும் கிடைத்தன. இதனையடுத்து மெம்பிஸ் நகர் திரும்பிய தினேஷ் சாவ்லாவை போலிஸார் கைது செய்தனர்.
அவரிடம் போலிஸ் நடத்திய விசாரணையில் திருடியதை ஒப்புக்கொண்டார். அந்த லக்கேஜில் இருந்து 4,000 டாலர் மதிப்பிலான பொருட்களை எடுத்துக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும், திருடுவது தவறு என எனக்குத் தெரியும் என்றும், ஆனால் திருடும்போது ஏற்படும் சிலிர்ப்பூட்டும் அனுபவத்திற்காக இதைச் செய்வதாக போலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக இதுபோன்று பொருட்களைத் திருடி வந்ததை ஒப்புக்கொண்ட அவர், மற்ற திருட்டுகள் குறித்த விவரங்களைத் தெரிவிக்க மறுத்துள்ளார்.