பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் உள்ள மிஸ்ட்ரல் என்ற உணவகம் நொறுக்குத் தீனி உணவு வகைகளுக்கு மிகவும் பிரபலமானது. பிரான்ஸ் செல்லும் மக்கள் இந்த ஹோட்டலில் சாப்பிடுவதை உயர்வாகக் கருதுவார்கள்.
இந்த ஓட்டலுக்கு கடந்த வெள்ளியன்று சாப்பிட வந்த ஒரு இளைஞர், சாண்ட்விச் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அதை தயார் செய்து கொண்டு வர தாமதாமானதால், ஓட்டல் ஊழியருடன் அந்த இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது கோபத்தின் உச்சிக்குச் சென்ற வாடிக்கையாளர், பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து உணவக ஊழியரைச் சுட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த அந்த ஊழியர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்துள்ளார்.
இதனையடுத்து அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அதிர்ச்சி அடைந்த மற்ற வாடிக்கையாளர்கள் பயத்தில் உறைந்தனர். இதனையடுத்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஆம்புலன்ஸுக்கும், காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் நிகழ்விடத்துக்கு விரைந்துள்ளனர்.
சுடப்பட்ட ஊழியருக்கு வெகுநேரம் முதலுதவி அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபரை போலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் கூறுகையில், பாரீஸின் கிழக்கு நொய்சி லே கிராண்ட் சபர்ப் பகுதியில் அதிகளவில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் குற்றச்சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.