அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக தேர்தல் களம்காண கமலா ஹாரிஸ், ஜோ பிடன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அமெரிக்க நாடாளுமன்றமான செனட் அவை எம்.பி-யான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை ரூ.157 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளார்.
சமீபத்தில் அதிபர் தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க 20 போட்டியாளர்கள் இடையே நடந்த நேரடி விவாத நிகழ்ச்சி மியாமி நகரில் நடைபெற்றது. இதில், கமலா ஹாரிஸின் பேச்சு பெரும்பாலான மக்களைக் கவர்ந்ததாக செய்திகள் வெளியாகின.
இதைத்தொடர்ந்து, அவருக்கு அதிகளவில் நிதி குவிந்து வருகிறது. கமலா ஹாரிஸ் இதுவரை இந்திய மதிப்பில் 157 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமலா ஹாரிஸின் தந்தை ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர். தாய் தமிழகத்தைச் சேர்ந்தவர். ஒருவேளை கமலா வேட்பாளராகி, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அமெரிக்க அதிபர் பதவியில் அமரும் முதல் பெண் எனும் பெருமையையும், இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையையும் பெறுவார்.