விலையுயர்ந்த அதிநவீன தொழில்நுட்ப செயல்பாடுகளுடன் இன்றளவும் சந்தையில் முதலிடத்தில் உள்ள ஆப்பிள் நிறுவனம். அந்நிறுவனத்தின் ஐபோன், ஐமேக், ஐபேட் என அனைத்து விதமான இயக்கிகளையும் வடிவமைத்தவர் ஜானி ஈவ்.
இவர் 1992ம் ஆண்டு முதல் சுமார் 30 ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனத்தில் வடிவமைப்பாளராக பணிபுரிந்தவர். தற்போது அதன் தலைமை டிசைனராக உள்ள ஜானி ஈவ் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம், LoveFrom என்ற சொந்த நிறுவனத்தை ஜானி ஈவ் தொடங்கவுள்ளார். ஆகையாலேயே ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஜானி ஈவின் ‘லவ் ஃப்ரம்’ நிறுவனத்தின் முதல் வாடிக்கையாளராக ஆப்பிள் நிறுவனம் இருக்கும் என பெருமையுடன் தெரிவித்துள்ளது. அதேப்போல், ஜானி ஈவ்-க்கு பதிலாக எவன்ஸ் ஹான்கி, ஆலன் டே அகியோர் நியமிக்கப்பட உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ. டிம் குக் கூறுகையில், ஜானி ஈவின் வடிவமைப்பு திறனுக்கு ஈடு இணையே இல்லை என்றும், 1998ம் ஆண்டு அவர் வடிவமைத்த ஐமேக் இன்றளவும் பெரிதும் பேசப்பட்டும், விற்பனை செய்யப்பட்டும் வருகிறது மிகப் பெருமைக்குரியது எனவும் அவர் தெரிவித்தார்.