அமெரிக்க நட்பு நாடுகளின் 4 எண்ணெய் கப்பல்கள் மீது ஓமன் வளைகுடாவில் கடந்த மாதம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு ஈரான் தான் காரணம் என அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டினார்.
பின்னர், ஈரானை எச்சரிக்கும் விதமாக தனது போர் கப்பல்களையும், போர் விமானங்களையும் ஈரானை நோக்கி நிறுத்தினார். இதனால் போர் பதற்றம் அதிகரித்தது. இந்த பதற்றத்தை தணிப்பதற்காக ஜப்பான் பிரதமருடன் ஈரானு நாட்டு தலைவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனிடையே ஓமன் வளைகுடாவில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நார்வே நாட்டின் எண்ணெய் கப்பல் தீ பிடித்து எரிந்தது. ‘கொக்குகா கரேஜியஸ்’ என்ற 2 எண்ணெய் கப்பல் பலத்த சேதம் அடைந்தது. இதற்கும் ஈரான்தான் காரணமாக இருக்கவேண்டும் என அமெரிக்க சந்தேகத்தை கிளப்பிவிட்டது.
அதனை நிரூபிக்கும் வேலையில் அமெரிக்க ராணுவம் இறங்கியது. இந்நிலையில், நேற்று அமெரிக்க ராணுவம் வீடியோ மற்றும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டது. அதில் ஈரான் ராணுவ வீரர்கள், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஒரு படகில் சென்று ஜப்பானின் எண்ணெய் கப்பல் அருகே ‘லிம்பெட்’ வகை கடல் கண்ணிவெடிகளை எடுக்கும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.
உடனே அதனை குறிப்பிட்டு ‘‘எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் ராணுவம்தான் காரணம் என அமெரிக்க அரசு கருதுகிறது,’’ என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ நேற்று பேட்டியளித்துள்ளார் .
இந்த வீடியோ குறித்து ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவேத் ஜாரிப் அவரது ட்வீட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது,"அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள வீடியோவில் உண்மை இல்லை. ஆதாரமின்றி ஈரானை அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா விடுத்த பொருளாதார தீவிரவாதத்தை மறைக்க, அமெரிக்காவின் ‘2வது ஆதரவு அணிகள்’ செயல்படுவது இதன்முலம் தெளிவாக தெரிகிறது’ என குற்றம்சாட்டி உள்ளார்.