வளரும் நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக பொது முன்னுரிமை திட்டத்தை அதாவது பொதுமைப்படுத்தப்பட்ட வர்த்தக சிறப்புரிமை திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்தி வந்தது. இதன் மூலம் வளரும் நாடுகள், அமெரிக்காவில் இருந்து வரி எதுவும் இன்றி பொருட்களை ஏற்றுமதி செய்துகொள்ளலாம்.
தெற்காசிய நாடுகள் அதிகமாக இந்த சலுகைகளின் மூலம் பயனடைந்து வந்தன. இந்த சலுகையினால் அதிக அளவில் இந்தியா பயன்பெற்ற வந்தது. அதன் மூலம் கடந்த 2017ம் ஆண்டு மட்டும் 570 கோடி டாலர் அளவுக்கு சலுகைகளை பெற்றுள்ளது. அதனால் இந்தியாவிற்கு ரூ.130 கோடி மிச்சமானது.
இதனைத்தொடர்ந்து அமெரிக்கா, கடந்த மார்ச் மாதம் 4-ஆம் தேதி இந்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வரும் இந்த சலுகையை ஏன் ரத்து செய்யக்கூடாது. இந்திய பொருட்களை அமெரிக்காவில் வரியின்றி இந்தியா விற்பனை செய்து வருகிறது.
ஆனால் நாங்கள் அனுப்பும் பொருட்களை எளிதாக விற்பனைக்கு அனுமதிக்க இந்தியா மறுப்பது ஏன் என்றும் கேள்வியெழுப்பியுள்ளது. இதனால் நாங்கள் ஏன் இந்தியாவிற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்புரிமை வர்த்தக அந்தஸ்தை ரத்து செய்யக்கூடாது என்றும் அதில் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த கடிதத்தின் மீது மோடி அரசு உரிய பதில் எதுவும் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், ” இந்தியாவுக்கு நீண்டகாலமாக அமெரிக்கா வழங்கி வந்த வளரும் நாடுகளுக்கான வர்த்தக சிறப்புரிமை (ஜிஎஸ்பி) அந்தஸ்தை ரத்து செய்கிறோம். இது வரும் ஜூன் 5-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
அமெரிக்காவின் பொருட்களை எளிதாக, நியாயமாக இந்திய சந்தைக்குள் விற்பனை செய்ய அனுமதிப்பது குறித்து எங்களுக்கு உறுதி ஏதும் அளிக்கவில்லை. இதனால், இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த அந்தஸ்தை ரத்து செய்கிறேன் ” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அமெரிக்கா அனுப்பிய நோட்டீஸுக்கு மோடி அரசாங்கம் விளக்கம் அளிக்காமல் இருந்ததே இந்த நடவடிக்கைக்கு காரணம் எனப் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.