குஜராத் மாநிலம் வாபி என்ற பகுதியில் அமைந்துள்ளது சர்வாடா. இங்கு வசித்து வரும் யாமினிபென் (Yaminiben Barot) என்ற 37 வயதுடைய பெண், தனது 5 வயது மகன் கௌரிக்கின் பிறந்தநாளை கொண்டாட எண்ணியுள்ளார். அதன்படி கடந்த செப்.14-ம் தேதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம் தனியார் மண்டபத்தில் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது டிஜே நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்ப்ட்டிருந்தது.
அப்போது டிஜே பாடலுக்கு அங்கிருந்த அனைவரும் நடனமாடி மகிழ்ந்தனர். அதன்படி சிறுவனின் தாய் யாமினிபென், தனது கணவருடன் மேடையில் நடனமாடி மகிழ்ந்துள்ளார். பின்னர் அந்த சிறுவனை, யாமினியின் கணவர் தூக்கிக்கொண்டு மேடையில் இருந்து இறங்கும்போது, தனது கணவரின் தோளில் தலை சாய்த்துக்கொண்ட யாமினி, சட்டென்று மேடையில் இருந்து கீழே சரிந்தார்.
யாமினி கீழே விழுந்ததை கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை உடனே தூக்கி எழுப்பினர். ஆனால் அவர் கண் திறக்காததால் பயந்துபோன குடும்பத்தினர், அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே யாமினியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து யாமினி மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தாய் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலமாக நாடு முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சட்டென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து வருவது அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.