நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் AIIMS மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் தற்போதுவரை இந்த மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரவில்லை. 2015-ல் பாஜக அறிவித்து ஒரே ஒரு செங்கல்லை மட்டுமே வைத்து சென்ற பிறகு, தற்போது வரை அந்த பகுதியில் வெறும் எழுத்து பலகை மட்டுமே வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு மக்கள் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் AIIMS குறித்த கேள்விக்கே ஒன்றிய பாஜக அரசு சரியான விளக்கம் அளிக்காமல் இருந்து வருகிறது. அறிவித்து பல வருடங்கள் ஆன பிறகும் அதற்கான முன்னெடுப்பை ஒன்றிய அரசு எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எனினும் இதனை கண்டுகொள்ளாமல் ஒன்றிய அரசு இருந்து வருகிறது.
இந்த சூழலில் பாஜக கூட்டணி ஆளும் மாநிலமான பீகாரில், AIIMS மருத்துவமனையின் ICU-வில் மூதாட்டி ஒருவர் புகைபிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு உள்ள பாட்னா நகரில் AIIMS மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.
நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலரும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற வருகை தருகின்றனர். அதில் சிலருக்கு உடல்நல பிரச்னை அதிகரித்து காணப்பட்டால், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டியது இருக்கும். அப்படி ஒரு மூதாட்டியும் இந்த மருத்துவமனையின் ICU வார்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில், அந்த மூதாட்டி பீடி பிடிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மூதாட்டி படுக்கையில் இருந்துகொண்டே பீடியை பிடித்துக்கொண்டிருக்கிறார். எதிரே நிற்கும் நபர் அதனை வீடியோ எடுத்தவாறே அவரது செயலை கண்டிக்கிறார். மேலும் மருத்துவரிடம் கூறுவதாகவும் தெரிவிக்கிறார்.
ஆனால் எதற்கும் அசராத அந்த மூதாட்டி, 'மருத்துவரை கூப்பிடு...' என்று திமிராக பதிலளிக்கிறார். அதோடு தான் வைத்திருந்த பீடியை, படுக்கையில் ஓரத்தில் வைத்து அணைக்கிறார். அப்போது அதில் இருந்த தீப்பொறி சட்டென்று பறக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக 3 நாட்களுக்கு முன்னர் வெளியான வீடியோ இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.