பிரியாணி என்ற அசைவ உணவைப் பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். 2023ம் ஆண்டு கூட அதிகமாக இணையத்தில் ஆர்டர் செய்யப்பட்ட உணவுப் பட்டியலில் பிரியாணிதான் முதலிடத்தில் உள்ளது. பிரியாணி என்று சொன்னாலே சிலருக்கு நாக்கில் எச்சில் ஊறும். அந்த அளவிற்குப் பிரியாணி உணவிற்கு உலகம் முழுவதும் காதலர்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில், தற்கொலைக்கு முயன்ற இளைஞரிடம் பிரியாணி வாங்கி தருவதாகக் கூறி அவரது உயிரை போலிஸார் காப்பாற்றிய சம்பவம் ஒன்று மேற்குவங்கத்தில் நடந்துள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் பார்க் சர்க்கஸ் பகுதியில் இரும்பு பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் மீது வாலிபர் ஒருவர் ஏறி தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறியுள்ளார். இதைப்பார்த்து அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பிறகு விரைந்து வந்த போலிஸார், அந்த வாலிபரிடம் பேசியுள்ளனர். அப்போது அவர் நிதி நெருக்கடியாலும் கடும் மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறியுள்ளார். அப்போது போலிஸார் உங்களுக்கு ஒரு வேலைவாங்கித் தருவதாகவும், சாப்பிடப் பிரியாணி வாங்கி வந்திருக்கிறோம் எனவும் கூறியுள்ளனர்.
இதைக்கேட்ட உடனே அந்த இளைஞர் தற்கொலை முடிவைக் கைவிட்டுவிட்டு கீழே இறங்கி வந்துள்ளார். பிறகு போலிஸார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.