மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அடுத்த ஒரு வாரத்திலேயே திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் டிசம்பர் 17, 18 ஆகிய இரண்டு நாட்கள் கன மழை செய்தது. 100 ஆண்டுகள் இல்லாத வகையில் கனமழை பெய்ததால் தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது.
இப்படி அடுத்தடுத்த இரண்டு பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்தது. உடனே மக்களை மீட்க அமைச்சர்கள் மற்றும் அரசு நிர்வாகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டடார். துரித நடவடிக்கையால் அதிகம் பாதித்ததால் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியது. அதேபோல் தென்மாவட்டங்களும் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இதற்கிடையில் மிக்ஜாம் புய கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதி அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதையடுத்து 90% மக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ரூ.6000 வழங்கப்படும் என முதலமைச்சர் நேற்று அறிவித்துள்ளார். அதோடு வீடுகளை இழந்தவர்கள், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, படகுகளை இழந்தவர்கள், பயிர் சேதம் உள்ளிட்டவைகளுக்கும் நிவாரண நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் டிச.19ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 2000 கோடி ரூபாயை அவசர நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் அடுத்தடுத்து 2 பேரிடர்களை சந்தித்த தமிழ்நாட்டிற்கு உடனே நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
நேற்று கூட தேசிய பேரிடர் நிதி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் விளக்கமாக சென்னார். அப்போது அவர், தமிழ்நாட்டினுடைய SDRF-க்கு ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி 1,200 கோடி ரூபாய் ஆகும். இதில் 75 விழுக்காட்டை, அதாவது ரூ.900 கோடியை ஒன்றிய அரசு தரவேண்டும். 25 விழுக்காட்டை, அதாவது ரூ.300 கோடியை தமிழ்நாடு அரசு ஏற்றிடவேண்டும். ஒன்றிய அரசின் பங்கானது ஆண்டுதோறும் இரு தவணைகளில் நமக்கு அளிக்கப்படுகின்றது. அதாவது இரண்டு தடவை தலா ரூ.450 கோடி நமக்கு அளிக்கப்படும். ஒரு இயற்கைப் பேரிடரின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும்போது இந்த SDRF நிதி போதவில்லை என்றால், அந்த இயற்கைப் பேரிடரைக் கடும் இயற்கைப் பேரிடராக அறிவித்து தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (NDRF) கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தையும், தற்போது தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தையும், இவ்வாறு கடும் பேரிடர்களாக அறிவித்து NDRF-ல் இருந்து கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டும் என்றுதான் நாங்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். இதைத்தான் நானும் மாண்புமிகு பிரதமர் அவர்களை நேரில் சந்தித்தபோதும் வலியுறுத்தி குறிப்பிட்டிருக்கிறேன். மனுவாகவும் கொடுத்திருக்கிறேன். ஆனால் இன்று வரை இந்த இரண்டு பேரிடர்களும் கடும் பேரிடர்களாக அறிவிக்கப்படவில்லை. NDRF-ல் இருந்து இதுவரை நமக்கு கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை கடும் பேரிடராக அறிவித்து ஒன்றிய அரசின் NDRFல் இருந்து கூடுதல் நிதி ஒதுக்கீட வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் நிதியளிக்காத ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து தமிழ்நாட்டு மக்கள் #OurTax_OurRights என்ற ஹேஷ்டேக்கில் மோடி அரசுக்கு எதிராக தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.