இந்தியாவில் ரயில் சேவையை மேம்படுத்தும் வகையிலும் 75 நகரங்களை இணைக்கும் படி வந்தே பாரத் விரைவு ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. அதன்படி முதல் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டத்தை 2019ம் ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். பின்னர் நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் தொடங்கி செயல்பட்டு வருகிறது.
அண்மையில் கூட சென்னை - நெல்லை உட்பட தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், ராஜஸ்தான் என நாடு முழுவதும் 9 வழித்தடங்களில் வந்தே பாரத் இரயில் சேவையை காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆனால் வந்தே பாரத் இரயில் தொடங்கப்பட்டதில் இருந்தே பல்வேறு சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணமாக காணப்பட்டது.
அதன்படி மாடு முட்டி சேதாரம், இரயில் பெட்டிக்குள் மழை, கதவு திறப்பதில் சிக்கல், இரயிலை கவிழ்க்க சதி உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளியாகி வந்தன. இந்த சூழலில் தற்போது முதியவர் ஒருவர், இரயில் வந்துகொண்டிருந்த நேரத்தில் தண்டவாளத்தை கடந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ள நிகழ்வு அரங்கேறியுள்ளது.
கேரளாவில் உள்ள திரூர் இரயில் நிலையத்தில் சம்பவத்தன்று மாலை நேரத்தில் வந்தே பாரத் இரயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. அந்த சமயத்தில் அதனை கவனிக்காத ஒரு முதியவர், தண்டவாளத்தை கடந்து பிளாட்பாரத்தில் ஏற முயன்றுள்ளார். அப்போது அந்த முதியவர் தண்டவாளத்தில் நின்று பிளாட்பாரத்தில் ஏறும் நேரத்தில் சட்டென்று மின்னல் வேகத்தில் வந்தே பாரத் இரயில் ஒன்று வந்தது.
தொடர்ந்து அங்கிருந்தவர்கள் கத்தி கூச்சலிடவே, அந்த முதியவர் உடனே மேலே ஏறிவிட்டார். அவர் ஏறிய உடனே, அந்த இரயில் அவர் நின்ற இடத்தையும் கடந்து சென்றது. நூலிழையில் அந்த முதியவர் உயிர் தப்பிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு பலரும் பல வித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.