பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பு கூட மத்தியப் பிரதேசம் உஜ்ஜயினி பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த கொடூர சம்பவம் மறைவதற்குள் தற்போது குஜராத் மாநிலத்தில் பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ஆண் நபர் ஒருவர் பெண்ணின் தலைமுடியை இழுத்து கொடூரமாக தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து போலிஸார் விசாரணை செய்துள்ளனர். இதில் அகமதாபாத்தில் உள்ள ஸ்பா வணிக வளாகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் இங்கு ஸ்பா நடித்து வரும் மொஹ்னி என்பவர்தான் அந்த பெண்ணை தாக்கியுள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்துதான் இந்த ஸ்பாவை நடத்தி வருகின்றனர்.
இதில் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டில் எழுந்த சண்டையில்தான் அந்த பெண்ணை அவர் அடித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து புகார் செய்யவில்லை என்றாலும், வீடியோ வைரலானதை அடுத்து போலிஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.