ஆந்திரா மாநிலம், ஸ்ரீ சத்யா சாய் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடந்துள்ளது. அப்போது இரண்டு இளைஞர்கள் அங்கு இசைக்கப்பட்ட பாட்டிற்கு மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது பிரசாத் என்ற இளைஞர் திடீரென சுருண்டு விழுந்துள்ளார். உடனே அவரை தூக்கிக் கொண்டு அருகே இருந்த மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். மேலும் மாரடைப்பால் இந்த மரணம் நடந்துள்ளது என்றும் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 26 வயதில் இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீக காலமாக இந்தியாவில் மாரடைப்பால் இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் கூட நடைபயிற்சியின் போது 28 வயது இளைஞர் உயிரிழந்தார். கொரோனா தொற்றுக்கு பிறகே இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இது குறித்து ஒன்றிய அரசு கவனம் செலுத்த வேண்டும் என தொடர்ந்து அரசியல் கட்சிகள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.