அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்கள் பயன்படுத்துவது தற்போது அனைவருக்கும் வாடிக்கையாகிவிட்டது. இந்த இ -காமர்ஸ் தளத்தில் தங்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களையுமே வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.இப்படி ஆர்டர் செய்து வாங்கும் போது சில நேரங்களில் நாம் ஆர்டர் செய்த பொருட்களுக்குப் பதில் வேறு ஒரு பொருட்கள் மாற்றி வரும் சம்பவங்களும் நடந்துகொண்டேதான் இருக்கிறது.
இந்நிலையில் அமேசானில் கேமரா லென்ஸ் ஆர்டர் செய்தவருக்குச் சீமை தினை பார்சலில் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியை சேர்ந்தவர் அருண் குமார் மெஹர். இவர் அமேசானில் ரூ.90 ஆயிரத்துக்கு கேமரா லென்ஸ் ஆர்டர் செய்துள்ளார். இவர் ஆர்டர் செய்த பார்சல் கடந்த ஜூலை 6ம் தேதி டெலிவரியானது. இதையடுத்து அவர் பார்சலை திறந்து பார்த்துள்ளார்.
அப்போது அதில் கேமரா லென்ஸ்-க்கு பதில் சீமைத் தினை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து அருண் குமார் மெஹர் ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார். அதில், நான் ஆர்டர் செய்த மேகரா லென்ஸ்க்கு பதில் சீமைத் தினை பார்சலில் வந்துள்ளது. இது குறித்து அமேசான் தீர்வு காணவேண்டும். நான் ஆர்டர் செய்த பொருளை எனக்கு அனுப்பி வையுங்கள் என பதிவிட்டுள்ளார்.
இவரின் பதிவைப் பார்த்த அமேசான் நிறுவனம், உங்களுக்கு நாங்கள் நிச்சயம் உதவி செய்கிறோம் என அவருக்கு ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. தற்போது அருண் குமார் மெஹரின் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.