தற்போதுள்ள காலகட்டத்தில் திருமணத்தின்போது, அதற்கு முன்போ அல்லது பின்போ ஜோடிகள் Photoshoot எடுப்பது வழக்கமாக உள்ளது. அதனை தங்கள் முக்கியமான ஞாபகங்களாக கருதுகின்றனர். இப்படி தம்பதிகள் Photoshoot எடுக்கும்போது பல சுவாரஸ்ய நிகழ்வுகளும், சில கோரமான நிகழ்வுகளும் நிகழ்கிறது.
அந்த வகையில் சில தம்பதிகள் ஆற்றங்கரையில் நின்றோ, மலையில் நின்றோ போட்டோஷூட் செய்யும்போது தவறி உயிரிழந்த விவகாரங்களும் உள்ளது. அதே போல் போட்டோஷூட்டின்போது விலங்குகள் செய்யும் காமெடிகளும் உள்ளது. அதுமட்டுமின்றி, சிலர் போட்டோஷூட் எடுக்கிறேன் என்ற பெயரில் சிக்கலில் சிக்குவதும் உண்டு.
அந்த வகையில் மணமகள் ஒருவர் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போட்டோஷூட் எடுத்ததால் அவருக்கு தற்போது 15 ஆயிரம் அபராதம் போலீஸ் விதித்துள்ளனர். இதனால் மணமகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் இளம்பெண் ஒருவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. இந்த சூழலில் வட இந்தியாவில் மணமக்களை காரில் வைத்து ஊர்வலமாக அழைத்து செல்வது வழக்கம். அந்த வகையில் மணமகளும் காரில் ஊர்வலம் சென்றுள்ளார். ஆனால் காருக்குள் அமராமல், காரின் மேலே அமர்ந்து போட்டோஷூட் எடுத்துக்கொண்டே ஊர்வலமாக சென்றுள்ளார்.
அதாவது மணமகள், SUV கார் ஒன்றின் முன்பக்கமுள்ள போனெட்(Bonnet) பகுதியின் மேல் அமர்ந்து ஆடம்பர உடை, நகை என மணக் கோலத்தில் சாலையில் ஊர்வலமாக வந்துள்ளார். அந்த கார் மெதுவாக செல்லவே மணமகளின் இந்த செயலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவுக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர். மேலும் இதுபோன்ற செயலுக்கு போலீசார் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.
இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த காரின் எண்ணை வைத்து மணமகள் யார் என்பதை அறிந்து அவருக்கு அபராதம் விதித்தனர். கார் கூரை மேல் அமர்ந்து பயணிப்பது மோட்டார் வாகன சட்டவிதிகளுக்கு புறம்பானது என்று மணமகளுக்கு போலீசார் ரூ.15,500 அபராதம் விதித்தனர். வித்தியாசமாக செய்கிறேன் என்று சர்ச்சையில் சிக்கியுள்ள மணமகளுக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.