பொதுவாக இரயிலில் பயணம் செய்வோர், தங்களது வீடுகளில் இருந்து ஆட்டோ, டாக்சி உள்ளிட்டவைகளில் இரயில் நிலையத்திற்கு வருவர். அப்படி வரும் வாகனங்கள் இரயில் நிலையத்தின் வெளியேயே தங்களது பயணிகளை இறக்கி விட்டு, காசு வாங்கி சென்று விடுவர்.
ஆனால் இங்கு ஒருவரோ தனது பயணியை ஆட்டோவில் இரயில் நிலைய பிளாட்பாரம் வரை ஆட்டோவில் கொண்டு வந்து இறக்கி விட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை பகுதியிலுள்ள குர்லா பகுதியிலுள்ள இரயில் நிலையத்திற்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அந்த ஆட்டோ ஓட்டுநர் பயணிகள் இரயிலுக்காக காத்துக்கொண்டிருக்கும் பிளாட்பாரத்திற்கு தனது ஆட்டோவை ஓட்டி வந்துள்ளார். அதாவது நடைமேடை எண் 1-க்கு ஆட்டோ ஒன்று தவறுதலாக பின்புறத்தில் இருந்து நுழைந்து விட்டது.
இதனை கண்ட சக பயணி ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். அது காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பிளாட்பாரத்திற்கு ஆட்டோ ஓட்டி வந்த ஆட்டோ ஓட்டுநரை கண்டு பிடித்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி அவரை கைது செய்தனர்.
தற்போது இது தொடர்பான செய்தியும், ஆட்டோவை பிளாட்பாரத்திற்க்கு ஓட்டி வந்தது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதே போன்றொரு சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு இதே மும்பை நகரில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.