வட இந்தியாவில், பான் மற்றும் புகையிலை பொருட்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதைப் பயன்படுத்தும் நபர்கள் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் எச்சில் துப்பி அசிங்கப்படுத்தி வருகின்றனர். இவர்களின் இந்த செயல் பல இடங்களின் அழகையே கெடுத்து வருகிறது.
அதிலும் குறிப்பாக ரயில் நிலையங்கள், ரயில் பெட்டிகளில் எச்சில் துப்பு சேதப்படுத்தி வருகின்றனர். அபராதம் விதித்தாலும் இவர்கள் இந்த அசிங்கத்தை நிறுத்த மறுக்கின்றனர். பான்பராக் எச்சிலை சுத்தம் செய்வதற்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.1200 கோடி வரை ரயில்வே துறை செலவு செய்கிறது.
இந்நிலையில், இந்தியாவில் இப்படிக் கண்ட கண்ட இடங்களில் பான்புகையிலையை சாப்பிட்டு எச்சில் துப்புவதுபோல் லண்டனிலும் வட இந்தியர்கள் எச்சில் துப்புவதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பேசுபவர், "பான்பராக் புகையிலையைச் சாப்பிட்டு மரத்தடியில் எச்சில் துப்புகின்றனர். இப்படி எச்சில் துப்பினால் ரூ.1000 பவுன்ட் அபராதம் விதிக்கப்படும் என அங்கு எழுதப்பட்டுள்ளது.
லண்டனில் பல இடங்களில் இப்படி உள்ளது. இதை யார் செய்வார்கள் என்று நான் சொல்ல வேண்டாம். அது உங்களுக்கே தெரியும்" என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த இணைய வாசிகள் பலரும், 'இந்தியாவை லண்டன் மாதிரி மாத்த முடியாது. அதனால் லண்டன இந்தியா மாதரி மாத்திடலாமுனு பார்க்கிறார்கள் போல' என கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். இப்படி பலரும் வட இந்தியர்களை நையாண்டி செய்து பதிவிட்டு வருகின்றனர்.