உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது கொரோனா தாக்கம். இந்த தாக்கத்தால் உலகளவில் பல கோடி மக்கள் உயிரிழந்தனர். அதோடு பொருளாதாரம் மக்கள் வாழ்வாதாரம் உள்ளிட்டவை பெரும் பாதிப்புக்குள்ளானது.
ஆனால் வடகொரியா கொரோனா தாக்கம் பற்றி பெரிதளவில் தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் அந்நாட்டில் மக்கள் எவ்வளவு பேர் உயிரிழந்தனர் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகவில்லை. அதோடு அந்நாட்டு அதிபர் பற்றியும் பல வதந்திகளும் பரவின.
இந்த நிலையில் வடகொரியாவில் கடந்த மே மாதம் கொரோனா வேகமாக பரவியது. அதோடு ஒமைக்ரான் தொற்றும் அங்கு பரவ தொடங்கிய நிலையில், அந்நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதையடுத்து அந்நாட்டில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டது.
வடகொரியா அரசு எடுத்த நடவடிக்கையால் தற்போது கடந்த இரண்டு வாரங்களாக ஒருவருக்குக் கூட கொரோனா பாதிப்பு இல்லை என்று அந்நாட்டு அதிபர் ஜோங் உன் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த சூழலில் அதிபர் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் அண்மையில் அளித்த பேட்டி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் அளித்த பேட்டியில், "வடகொரியாவில் கொரோனா ஏற்பட்ட நேரத்தில், அதிபர் கிம் ஜாங் உன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அவர் தனது உடல்நிலையை கவனிக்காமல் மக்களின் அக்கரையில் கவனம் செலுத்தினார்.
தென்கொரியா, தங்கள் எல்லையைத் தாண்டி பலூன்கள் மூலம் துண்டுப்பிரசுரங்கள்அனுப்பி, எங்கள் வடகொரியாவில் கொரோனா தொற்றைப் பரப்பியிருக்கிறது. தொற்று உள்ள பொருட்களை பலூன் மூலம் அனுப்புவது மனிதகுலத்திற்கே எதிரான செயல். இதை தென்கொரியா மீண்டும் தொடர்ந்துகொண்டே இருந்தால் வடகொரியா அதற்கு தக்க பதிலடி கொடுக்க நேரிடும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.