மனிதனுக்குள் எப்போதுமே ஒரு விலங்கு தூங்கிக் கொண்டிருக்கிறது. இது வெறும் வசனம் மட்டுமல்ல, உளவியல்!
பரிணாமரீதியாகவே விலங்கிலிருந்தும் தன் வளர்ச்சிக் கட்டங்களை மனிதன் கொண்டிருப்பதால் அவனுள் விலங்குக்கான தன்மைகளும் இருக்கும். ஆனால் அவை சமூகத்துக்கு ஆகாது. அதே நேரம் முற்றிலும் விலங்குத்தன்மையை அவனால் ஒழித்துவிடவும் முடியாது. இருதலைக் கொள்ளி எறும்பு கதைதான்!
உங்களுக்கு நேற்று வரை உணவளித்தவன் கூட இன்று ஏதோ ஒரு எண்ணத்துக்காக உங்களை கொலை செய்யலாம். காயப்படுத்தலாம். அவமானப்படுத்தலாம். ஒடுக்கலாம்.
கணநேரத்தில் அவன் மிருகமாக சறுக்கிவிட முடியும்!
உண்மை என்னவெனில் மனிதன் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை
மிருகத்தில் இருந்துதான் மனிதன் உருவானான் என்றாலும் மிருகத்தன்மையோடயே அவன் முடிந்துவிடுவதற்காக மனித இனம் பரிணமிக்கவில்லை. நமக்குள் மனித நிலைக்கான சில விஷயங்களை நாம் ஏற்கனவே உருவாக்கி இருக்கிறோம் என்ற உண்மையே இதற்கு பெரும் சாட்சி.
மனிதனால் மட்டும்தான் நேசிக்க முடியும். குற்றவுணர்ச்சி கொள்ள முடியும். கலங்க முடியும். நேசம் என்கிற உணர்வு மிகவும் இளைய உணர்வு. சமீபமாகத்தான் மனிதன் நேசத்தை கண்டுபிடித்திருக்கிறான். மிகச்சிலரால் மட்டும்தான் நேசம் என்கிற உணர்வை புரிந்துகொள்ள முடிகிறது; பாராட்ட முடிகிறது. பெரும்பாலானோருக்கு முடிவதில்லை.
ஆரம்பத்தில் இருந்து மனிதன் உருவாக்கிய எல்லா சமூகநிலைகளும் அதிகார மட்டங்களும் மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தின் உணர்வு நிலைகளை அடிப்படையாக கொண்டே உருவாக்கப்பட்டவை. அடுத்தவனை சுரண்டவும் ஒடுக்கவும் மட்டுமே உருவாக்கப்பட்ட அதிகார நிலைகள் அவை. அவற்றுக்குள் இயங்கும் மனிதன், திரும்ப மிருக நிலை உணர்வுகளையே கையாள நிர்ப்பந்திக்கப்படுகிறான். அதனால் மிருகநிலை உணர்வுகளை ரசிக்கிறான்.
இன்றைய சமூக அமைப்பும் அதிகாரமும் மனிதனுக்குள் இருக்கும் மிருக உணர்வுநிலைகளான வஞ்சம், பொறாமை, குரூரம், பழியுணர்ச்சி போன்றவற்றின் மேல் கட்டமைக்கப்பட்டவை. அந்த சமூகத்துக்குள் புழங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவன், திரும்ப திரும்ப குரூரத்துக்கே பழகுகிறான். வஞ்சத்தை ரசிக்கிறான். அகங்காரத்தை போற்றுகிறான்.
மனிதநேயம் என்பது அவனுக்கு நகைச்சுவையாக தெரிகிறது. குற்றவுணர்வு முட்டாள்தனமாக இருக்கிறது. இரக்கம் அபத்தமாக தெரிகிறது.
மிருகத்திலிருந்து மனிதத்தை நோக்கிய பயணம் வெற்றியடைய வேண்டுமென்றால், இந்த சமூகம் மனிதத்தால் கட்டமைக்கப்பட வேண்டும். நேயம், குற்றவுணர்வு, இரக்கம், கலக்கம், பணிவு போன்ற மனித உணர்வு நிலைகளை அடிப்படையாக கொண்டு எழுப்பப்பட வேண்டும். சுரண்டல், ஒடுக்குதல் போன்ற மனநிலைகளை காப்பாற்றும் அதிகார மையங்கள் அகற்றப்பட வேண்டும். அல்லவெனின், மிருகங்களாக இருந்து ஒருவரை ஒருவர் பிறாண்டி மிருகங்களாகவே மொத்த இனமும் அழிந்துவிடுவோம்.