பலூன் விற்பனை செய்து வந்த கிஸ்பு என்ற இளம்பெண், புகைப்படக் கலைஞர் ஒருவரால் மாடல் ஆகியுள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூரில் அண்டலூர் காவு திருவிழா நடந்தது. சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்ட இந்த விழாவில் அர்ஜூன் கிருஷ்ணன் என்ற புகைப்பட கலைஞர் புகைப்படம் எடுத்துள்ளார்.
அந்த திருவிழாவில் பலூன் விற்றுக் கொண்டிருந்த கிஸ்பு என்ற பெண் புகைப்படக் கலைஞரின் கவனத்தை ஈர்த்துள்ளார். உடனடியாக அந்தப் பெண் மற்றும் அவரது தாயாரின் அனுமதியுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, அர்ஜூன் கிருஷ்ணன் தான் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இது வைரலாக பரவியது. ராஜஸ்தானை சேர்ந்த கிஷ்புவின் புகைப்படங்களை ரசித்துப் பகிர்ந்தனர்.
கிஸ்புவின் புகைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, கிஷ்புவை தொடர்பு கொண்டு மாடலாக மாற்றி புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டார்.
அதற்கு அப்பெண்ணும் ஒப்புக்கொண்டதால்,விதவிதமாக அலங்காரம் செய்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதற்கு பலத்த வரவேற்பு கிடைத்ததோடு, கிஸ்பு பல நிறுவனங்களுக்கு மாடலாக ஒப்பந்தமாகி உள்ளார்.
ஒரே நாளில் பலூன் விற்ற பெண் மாடல் அழகியாக பிரபலமாகியிருப்பது இன்றைய சமூக வலைதளங்களின் சாதனைதான் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.