கால்பந்து ஜாம்பவான் மாரடோனா பிங் பாங் குரோனோகிராம் என அழைக்கப்படும் பாரம்பரிய கைக்கடிராம் ஒன்றை அணிந்திருந்தார். இவரது மறைவை அடுத்து அந்த கடிகாரத்தை துபாயில் உள்ள நிறுவனம் ஒன்று பாதுகாத்து வந்திருந்தது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த கைக்கடிகாரம் அங்கிருந்து திடீரென காணாமல் போனது. இது குறித்து துபாய் போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.
இதில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாசித் ஹூசைன் என்பவர்தான் கைக்கடிகாரத்தைத் திருடிச் சென்றது என்பதை போலிஸார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அசாம் போலிஸார் வாசித் ஹூசைனை கைது செய்து மாரடோனாவின் கைக்கடிகாரத்தை அவரது வீட்டிலிருந்து மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். திருடப்பட்ட மாரடோனாவின் கைக்கடிகாரம் 20 லட்சம் ரூபாய் மதிப்புடையது.
கைதான வாசித் ஹூசைன் துபாயில் மாரடோனாவின் உடமைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் பாதுகாவலராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது மாரடோனாவின் கைக்கடிகாரத்தைத் திருடி அவர் இந்தியா தப்பித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.