இந்தியாவில் ஃபோட்டாஷாப் என்றாலே அனைவரது நினைவுக்கும் எட்டுவது பாரதிய ஜனதா கட்சி என்றே வரும் என்றளவுக்கு அவர்களுக்கு ஃபோட்டோஷாப் திறமைகள் நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் என இணையத்தில் வெளியாகி வருகிறது.
அவ்வகையில் கடந்த நவம்பர் 6ம் தேதி பா.ஜ.கவின் தேசிய மகளிரணி தலைவரும், எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லியில் உள்ள தனது கட்சி தலைமையகத்தில் எடுத்துக் கொண்ட போட்டோவை பகிர்ந்து ‘பா.ஜ.க குடும்ப உறுப்பினர்களுடன்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. ஏனென்றால், பா.ஜ.க எம்.பி ராஜ்குமார் சாகர் உள்ளிட்டோர் பதிவிட்ட ட்விட்டர் புகைப்படங்கள் மற்றும் இக்கூட்டம் குறித்து வெளியான செய்திகளின் புகைப்படத்தில் வானதி சீனிவாசன் இடம்பெறவில்லை.
ஆகவே வானதி சீனிவாசன் பதிவிட்டதில் அவரது புகைப்படம் போட்டோஷாப் மூலம் இணைக்கப்பட்டிருந்தது அப்பட்டமாக தெரிந்தது. இருப்பினும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற பதத்தில் வானதி சீனிவாசன் அதற்கு விளக்கமும் அளித்திருந்தார்.
அதில், “நான் டெல்லி சென்றது உண்மைதான். ஆனால், குழு புகைப்படம் எடுக்கும்போது சற்று தாமதமாக சென்றதால் பலரும் பஸ்ஸில் ஏறிவிட்டனர். இதனால் ஒரு நினைவுக்காக, என்னை போட்டோகிராபர் தனியாக புகைப்படம் எடுத்து குழு புகைப்படத்துடன் இணைத்துக் கொடுத்தார்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வானதி சீனிவாசனின் தொழில்நுட்பம் சார்ந்த பதிலுக்கு நெட்டிசன்களிடையே மீண்டும் கேலிக் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது. அதன்படி, மகாத்மா காந்தி, நேதாஜி என சுதந்திர போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட படங்களில் வானதி சீனிவாசன் இருப்பது போன்று புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.