தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையின் அடிப்படை தேவை குறித்து கடந்த ஆண்டு நடிகை ஜோதிகா விருது விழா ஒன்றில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. தஞ்சை பெருவுடையார் கோவிலோடு ஒப்பிட்டு பள்ளி, மருத்துவமனைகளின் தேவை குறித்து பேசியிருந்தார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. அதுபோக, இந்து மதத்தின் அத்தாரிட்டியாக தன்னைத்தானே உருவகித்துக் கொண்டிருக்கும் பா.ஜ.கவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகரும், ஜோதிகா பேசியதை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவருடைய பதிவுக்கு வழக்கம் போல எதிர்ப்புகள் வந்ததை அடுத்து அவரும் வழக்கம்போல பதிவை நீக்கியிருந்தார்.
அதனையடுத்து, உடன்பிறப்பே படத்தின் படப்பிடிப்பு மருத்துவமனையில் நடந்த போதுதான் அதன் பராமரிப்பு பணி குறித்து கண்டு வேதனையுற்று பேசியிருந்தார் என அப்போதே இயக்குநர் சரவணன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். மேலும், மருத்துவமனையை சீரமைக்க ஜோதிகா 25 லட்சம் ரூபாய் நிதியும் அளித்திருந்தார்.
இந்நிலையில் ஜோதிகாவின் பேச்சுக்கு பிறகு தஞ்சை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து இயக்குநர் சரவணன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், “ஜோதிகாவின் பேச்சு பரபரப்பான நிலையில் மருத்துவமனையின் முதல்வராக இருந்த மருதுதுரை தானே முன் வந்து வளாகத்தை ஆய்வு செய்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது 10க்கும் மேற்பட்ட பாம்புகளும் பிடிபட்டிருக்கிறது. இவையெல்லாம் ஜோதிகா அன்று விருது விழாவில் பேசியதன் மூலம் ஏற்பட்ட நல்ல மாற்றங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.