நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை உருவாகியிருக்கிறது. வட இந்தியாவில் குறிப்பாக குஜராத், உத்தரபிரதேசம், பீகார்,சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் மகராஷ்டிராவில் கொரோனா தொற்றின் தன்மை தீவிரம் அடைந்துள்ளது. உத்திரபிரதேசத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறியதன் விளைவாக பல்லாயிரக்கணக்கானோர் செத்து மடிந்து வருகின்றனர்.
நிலைமை கட்டுக்கு அடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. உத்திரபிரதேசத்தில் அரசின் செயல்பாடு குறித்து, அம்மாநில சட்டத்துறை அமைச்சர் ஒருவரே விமர்சனம் செய்தும், கண்டனம் தெரிவித்தும் தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோ நகரின் கோமதி ஆற்றுப்படுகையில் உள்ள பைசகுண்ட் மயானத்தில் இரவு நேரங்களில் குவியல் குவியலாக பிணங்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது கொரோனா தடுப்பு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் செயலிழந்து விட்டதை காட்டுகிறது என்று இணையத்தில் சமூக ஆர்வலர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தை செய்தியாளர் ஒருவர் படம் பிடித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதுடன் இந்த வீடியோ செய்தியாகவும் வெளியானது. தற்போது இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
இணையத்தில் மயானத்தில் பிணக்குவியல்கள் எரியும் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, பைசகுண்ட் மயானம் உள்ள பகுதியை தகர ஷீட்டுகள் கொண்டு அடைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த சம்பவமும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஒருபக்கம் தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் நோய் தடுப்பு நடவடிக்கையையே கொண்டாட்டமாக கருதிவரும் மத்திய, மாநில அரசுகள், கும்பமேளாவில் குளித்து விட்டு வந்தவர்களுக்கு கொரோனா சோதனையை ஒழுங்காக செய்வார்களா? எனக் எழுப்பியுள்ளனர்.
இதைப்போன்று சட்டீஸ்கர் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் எந்தவித கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாததால் ஆயிரக்கணக்கானோர் செத்து மடிவதாக தெரிய வருகிறது.
மத்திய பிரதேசத்தில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர். கடந்த 11ந் தேதிவரை நாளொன்றுக்கு 20 முதல் 30 பேர் போபால் சுடுகாடுகளில் பிணங்களாக எரிக்கப்படுவதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரிக்கும்முன், அரசு அலட்சியப்போக்கை கடைபிடிக்காமல், போர்க்கால அடிப்படையில் செயலாற்றிட வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.