அரக்கோணம் அருகே தேர்தல் தகராறில் சோகனூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனன் (26), சூர்யா (26) ஆகிய இரு இளைஞர்கள் கடந்த 7ம் தேதி படுகொலை செய்யப்பட்டனர். இதில், அர்ஜூனனுக்குத் திருமணமாகி 10 நாட்கள்தான் ஆகியுள்ளன.
தேர்தல் முன்விரோதத்தால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இந்த இரட்டைக் கொலைச் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இந்தப் படுகொலை அ.தி.மு.க - பா.ம.கவினரால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டப்படுகிறது.
குறிப்பாக இரட்டைக் கொலை வழக்கில் அ.தி.மு.க ஐ.டி விங் செயலாளர் சத்யா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலைக்குப் பின்னணியில் அ.தி.மு.க - பா.ம.க-வைச் சேர்ந்த இன்னும் பலரும் சம்பந்தப்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இந்த இரட்டைக் கொலைத் தொடர்பாக வீடியோ வெளியிட்ட அன்புமணி ராமதாஸ், “அரக்கோணத்தில் நடைபெற்ற கொலை சம்பவம் குடிபோதையில் நடந்துள்ளது. இந்த கொலைக்கு சாதி மோதல் காரணமில்லை. திருமாவளவன் போன்றவர்கள் பொய்யான தகவலைப் பரப்பி வருகின்றனர். படித்தவர்கள் திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். யாரும் அவருடன் நிற்கவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
அன்புமணியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் அன்புமணியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திருமாவளவனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், சமூக வலைதளங்களில் #MyLeaderThiruma, #StandWithThiruma என்ற ஹேஷ்டேகில் தாங்கள் படித்து வாங்கிய பட்டங்களை குறிப்பிட்டு, “நான் தோழர் திருமாவோடு நிற்கிறேன்... திருமாவளவனை ஆதரிக்கிறோம்.. அவரை நம்புகிறோம்...” என பதிவிட்டு வருகின்றனர்.
அந்தவகையில், தி.மு.க எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில், “படித்தவர்கள் திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். யாரும் அவருடன் நிற்கவில்லை- அன்புமணி ராமதாஸ். நான் பழனிவேல் தியாகராஜன் B. Tech (Hons) (Chemical Engg), MS (Operations Research), MBA (Finance), PhD (Engg Psychology) படித்திருக்கிறேன். நான் திருமாவளவனுடன் நிற்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து தி.மு.க எம்.பி மருத்துவர் செந்தில்குமார், தி.மு.க வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) நல அணியின் இணைச் செயலாளர் எம்.எம்.அப்துல்லாவும் ட்விட்டரில் திருமாவளவனுக்கு ஆதரவாக தங்களின் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, முனைவர்கள், மருத்துவர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர் உள்ளிட்ட பலரும் இத்தகைய கருத்தை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.