ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பாபா ராம்தேவ், யோகா கலை மூலம் பிரபலம் அடைந்த இவர், கடந்த 2002ஆம் ஆண்டில் இருந்து மிகப்பெரிய அளவில் யோகா வகுப்புகளை நடத்தி வருகிறார். பதஞ்சலி என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி ஆயுர்வேத பொருட்களை விற்பனை செய்து, வரும் இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கக்கூடியவர்.
இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். குறிப்பாக இந்நிறுவனம் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி பரபரப்பை கிளப்பியது. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள குரு ஷரனன் ஆசிரமத்தில் துறவிகளுக்கு யோகா கற்றுத் தரும் பணியில் பாபா ராம்தேவ் சமீபத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அதுவும் அலங்கரிக்கப்பட்ட யானை மீது கால்களை மடக்கியவாறு அமர்ந்து யோகா செய்துள்ளார். அப்போது யானை லேசாக அசைய எதிர்பாராத விதமாக ராம்தேவ் கீழே விழுந்துள்ளார். இதைக் கண்டு அருகிலிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே சுதாரித்துக் கொண்டு சிரித்தவாறே எழுந்து கொண்டார். இருப்பினும் முதுகுப் பகுதியில் பலத்த அடி விழுந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்தான 22 வினாடிகள் அடங்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதனை ட்விட்டர் தளத்தில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் ராம்தேவ் சைக்கிளில் பயணம் செய்வது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. அதில் ஒரு வளைவில் சறுக்கி கீழே தவறி விழுந்துள்ளார். இது அப்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நண்டு கொழுத்தால் வளைதங்காது என்பது பழமொழி. யோகா கலை என்ற பெயரில் தொழில் நிறுவனம் நடத்தி வரும் பாபா ராம்தேவ், ஒரு விளம்பரத்திற்காக யானை மீது யோகா செய்து காட்டியவருக்கு விளம்பரமே வினையாக முடிந்துள்ளது என்று யோகா ஆர்வலர்கள் கூறுகின்றனர்.