கொரோனா தாக்கம் அதிகரித்துவரும் காரணத்தால் 21 நாட்களுக்கு இந்தியாவில் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவசியமின்றி பொதுவெளியில் நடமாடக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து மக்கள் வெளியே வருவதை தவிர்த்துள்ளனர்.
இதனால் நாடு முழுவதும் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடப்பதால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் கடற்கரைகளில் நண்டுகள், ஆமைகள் கரைகளில் ஒதுங்குவது போல, நகர்ப்புறங்களிலும் பல உயிரினங்கள் சுதந்திரமாக நடமாடுகின்றன.
அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் ஊரடங்கு காரணமாக வீட்டின் முன் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் கண்ணாடி உள்ள பகுதியில் நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது.
இதனைக் கண்டதும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறை பணியாளர், மோட்டர் பைக்கில் இருந்த பாம்பை வெளியேற்றினர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.
இதனைக் கண்ட இணையவாசிகள், ஊரடங்கின்போது வாகனங்களை உபயோகிக்கவில்லை என்றாலும், அதனை அவ்வப்போது சுத்தப்படுத்தி வைத்தால் இதுபோன்ற உயிரினங்கள் புகுவதைத் தவிர்க்க முடியும் என கருத்து தெரிவிக்கின்றனர்.