கடுமையான வெப்பநிலை காரணமாக ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, சிட்னி ஆகிய மாகாணங்களில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலே காட்டுத் தீ பரவி வருகிறது.
இதனால், கோடிக்கணக்கான விலங்குகள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தன. மக்கள் வீடுகளை இழந்து என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து வந்தனர். காட்டுத் தீ காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு மக்களை மீட்கும் பணியில் இன்றளவும் ஆஸ்திரேலிய நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது.
இதுவரையில், காட்டுத் தீயால் 23 பேர் பலியாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பின்னர், பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் காட்டுத் தீ அணைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வனவிலங்குகளுக்கும் அவ்வப்போது உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஒருசில பகுதிகளில் உள்ள மரங்களின் பட்டைகளில், செடி, கொடிகள் மலர்கள் துளிர்விடத் தொடங்கியுள்ளன. இது பார்ப்பவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், கடந்த 16ம் தேதி காட்டுத் தீ ஏற்பட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. இதனால் காட்டுத்தீயின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய மக்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் மழை பெய்த நிலையில், அப்போது தண்ணீர் தாகத்தால் தவித்து வந்த கோலா கரடி ஒன்று சாலையில் ஓடும் மழை நீரை குடித்தது. இதனை ஃபமீலா என்ற பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் காரில் சென்றுகொண்டிருந்த போது இதனைப் பார்த்துள்ளார்.
அதில் சாலையில் இருந்த கோலா கரடிக்கு அடிபட்டுள்ளதா என பார்த்தபோது அது தனது தாகத்தை தணித்துக் கொண்டிருந்தது என்றும் இது போன்று வனவிலங்குகள் தண்ணீர் இல்லாமல் தவித்து வருவது மனதைக் கலங்க வைத்துள்ளது எனவும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
மேலும், தண்ணீருக்காக வன விலங்குகள் சாலையில் அலைந்து திரிந்து வருவதால் வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்லவேண்டும் என்றும் ஃபமீலா வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த கோலா கரடி சாலையில் இருந்த மழை நீரை குடிப்பதையும் வீடியோ எடுத்துப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.