ஆணோ, பெண்ணோ வயோதிகர்களுக்கு பெரும்பாலும் வரக்கூடிய பிரதான பிரச்னை மூட்டு வலி. இதற்காக பல வகையிலான மாத்திரைகளை எடுத்துக்கொண்டாலும் ஏதும் பயனளிக்காமலே இருக்கும். இதனால் மீதி காலம் முழுவதும் அவர்கள் மூட்டு வலியால் அவதியுறுகின்றனர்.
மூட்டு வலி வருவதற்கு பெரும்பாலும் புளிப்பு சுவை கொண்ட உணவே காரணம் எனும் சொற்றொடர் வழக்கமாக இருப்பதால் புளி, தக்காளி போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதை பலர் தவிர்த்து வருவார்கள். ஆனால் இட்லி, தோசை, இனிப்பு போன்ற உணவுப் பொருட்கள் செரிமானம் ஆகாமல் வயிற்றில் புளிப்பை உண்டாக்குவதும் மூட்டு வலி ஏற்படக் காரணமாக அமையும்.
இதற்கு நிரந்தர தீர்வாக எவ்வித மருந்தும் எடுத்துக்கொள்ளாமல் வெறும் கைகளைக் கொண்டே குணமாக்கலாம் என கூறுகிறார் சித்த மருத்துவர் கல்பனா தேவி. மூட்டு வலி, முழங்கால் வலி போன்ற எலும்புத் தேய்மான பிரச்னைகளுக்கு சந்தி முத்திரை உதவுகிறது.
இதற்கு, வலது கையின் மோதிர விரல் மற்றும் கட்டை விரலின் நுனியும், இடது கையின் கட்டை விரல் மற்றும் நடு விரலின் நுனியும் தொட வேண்டும். இதனை காலை மாலை என இரு வேளைகளிலும் தலா 15-20 நிமிடங்களுக்கு செய்து வந்தால் பலன் கிட்டும் எனக் கூறுகிறார்.
அதேசமயம் வயதானவர்கள் ஒரே இடத்தில் உட்கார முடியவில்லை என்றாலும் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே இந்த முத்திரையைச் செய்யலாம். மேலும், வாயு முத்திரையை ஒரு முறை செய்துவிட்டு சந்தி முத்திரை செய்யலாம்.