கர்நாடக மாநிலத்தில் உள்ள தக்சினா மாவட்டத்தில் RSS அமைப்பின் சார்பில் இயங்கும் ஸ்ரீராம் வித்யாகேந்திரா பள்ளியில் பாபர் மசூதி இடிப்பு தினம் கடந்த 15ம் தேதி கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டதாக புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தனது ட்விட்டர் தளத்திலும் பதிவிட்டுள்ளார்.
இந்த விழாவில் மாணவர்கள், காவி உடை மற்றும் துண்டுடன் பாபர் மசூதியை இடிப்பது போன்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ரசித்த கிரண்பேடி மாணவர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார்.
கவர்னர் கிரண்பேடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் காரணமாக, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் மத ஒற்றுமையை சிதைக்கும் விதமாகவும் அவர் நடந்து கொண்டார் என்றும் , அவரது பதவி ஏற்பின் போது எடுத்த உறுதிமொழியை மீறியதற்காகவும் , இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அவமதித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது உரிய சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யக் கோரி புதுச்சேரியைச் சேர்ந்த சமூக இயக்கங்கள் போலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளன.
இதுகுறித்து இந்திய தேசிய இளைஞர் முன்னணியின் தலைவர் கலைப்பிரியன் தலைமையில் பொதுச்செயலாளர் தாமரைக்கண்ணன், செயலாளர் சரவணன், சக்திவேல், பாலா, கதிரவன், விமல வேந்தன், சந்திரன், ஜான், அந்துவான், மனிதநேய மக்கள் கட்சி புதுச்சேரி மாநில தலைவர் பஷீர் அகமது, புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் இன்று மாலை 4 மணிக்கு புதுச்சேரி தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் கிரண்பேடி மீது புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் விவரம் வருமாறு:-
கடந்த 15-12-2019 அன்று கர்நாடக மாநில, தக்சினா மாவட்டத்தில் ஸ்ரீராம வித்யாகேந்திரா பள்ளியில் ஆண்டு விழாவில் பாபர் மசூதி இடிப்பை கொண்டாடிய பள்ளியின் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மதசார்பற்று வாழும் புதுச்சேரி மக்கள் மத்தியில் வெறுப்புணர்வையும் சிறுபான்மையினருக்கு எதிராக மதரீதியான வெறுப்புணர்வை தூண்டும் நிகழ்வுகளில் பங்குபெற்றது மட்டுமின்றி அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இந்திய தேசத்தின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக நடந்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் மேற்காட்டும் மதசார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவத்திற்கு எதிராக நடந்துள்ள கிரண்பேடி செயல் கண்டனத்திற்குரியது
மேலும், பாபர் மசூதி இடிப்பு உச்ச நீதிமன்றம் சரி என ஆதரிக்க வில்லை, தவறென கண்டித்துள்ளது . ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்சநீதின்ற தீர்ப்பை பற்றி பேசிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பாபர் மசூதி இடிப்பு பிரச்சினையில் ஒரு சாராரின் கொண்டாட்ட நிகழ்வில் பங்குபெற்று அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டு மகிழும் அளவிற்கு அவரது மத வெறி மதாசார்பின்மையை மறைத்துள்ளது.
மேலும் அவரது பதவி ஏற்பின் போது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறாமல் செயல்படுவேன் என அவர் எடுத்த உறுதிமொழியை மீறியுள்ளார் , இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அவமதித்துள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே , இந்திய நாட்டின் மதசார்பற்ற தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் விதத்திலும், புதுச்சேரி மக்கள் மத்தியில் பிரவினையை தூண்டும் விதத்திலும், அவரது பதவி ஏற்பின் போது எடுத்த உறுதிமொழியை மீறியதற்கும் , இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அவமதித்தற்கும், புதுச்சேரி நன்மதிப்பை கெடுக்கும் விதத்தில் நடந்து கொண்ட துணைநிலை ஆளுநர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு இந்திய தேசிய இளைஞர் முன்னணியின் தலைவர் கலைப்பிரியன் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவர்னர் கிரண்பேடியை நீக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்தும் வலியுறுத்தியுள்ளார். இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா உள்ளிட்டோரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழும் நிலையில் தற்போது அவர், ஆர்.எஸ்.எஸ். சார்பு பள்ளி நடத்திய சர்ச்சைக்குறிய விழாவில் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.