அலுவலகமோ, பொதுவெளியோ கழிப்பறைகள் ஆண் / பெண் என பிரிக்கப்பட்டே அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், அமெரிக்காவில் உள்ள ஊபர் வாடகை கார் நிறுவனத்தின் அலுவலகத்தில் ஊழியர்களுக்கென தனியாக ஒரு கழிப்பறையும், கார் ஓட்டுநர்களுக்கென தனியாக ஒரு கழிப்பறையும் வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஊபர் பெண் ஓட்டுநர் எரிக்கா பெட்ஸ், ஆண், பெண் கழிப்பறைகள் தனித்தனியாக வைக்கப்பட்டிருப்பது போல ஊபர் ஹப்பில் பணியாளர்களுக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் தனித்தனியாக கழிப்பறைகள் வைக்கப்பட்டுள்ளன.
ஊழியர்களையும், ஓட்டுநர்களையும் வெவ்வேறு சமூகத்தினராக பிரித்து தனித்தனி கழிப்பறைகள் வைக்கப்பட்டிருப்பது விந்தையாக உள்ளது என நீங்களும் நினைக்கிறீர்களா? என புகைப்படம் எடுத்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது வைரலாகவே, ஊபர் நிறுவனத்துக்கு பலர் கண்டனம் தெரிவிக்கத் தொடங்கினர். இதுமட்டுமல்லாமல், அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினரான அலெக்சாண்ட்ரியா ஒகேசியோ கோர்டெஸும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பகிரங்கமாக மன்னிப்புக் கோரி அறிக்கை வெளியிட்டுள்ள ஊபர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தத் தவறுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதோடு, உடனடியாக இந்தப் பாகுபாட்டை நீக்குவதாகவும் கூறியுள்ளார்.