உத்தர பிரதேச மாநிலத்தின் ரேபரேலி பகுதியில் காந்தி சேவா நிகேதன் என்ற ஆசிரம பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் மம்தா துபே எனும் ஆசிரியை குழந்தைகள் நல அதிகாரியாகவும் சில நேரங்களில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துவந்துள்ளார். இவர் கடந்தாண்டு பள்ளி நிர்வாகத்தால் பணிமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் அப்போது இருந்த ஆட்சியர் உதவியுடன் மீண்டும் அதே பள்ளியில் பணியில் அமர்த்தப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் தனது இருக்கையில் இருந்த மம்தா துபே தனது நாற்காலியில் அமர்ந்திருக்கும்போது, அங்கு வந்த ஒரு மாணவர் அவருடைய கைப்பையை தூக்கி எறிந்து அவருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டார்.
அப்போது ஒரு மாணவன் திடீரென மம்தா துபேவைத் தள்ளிவிட்டு நாற்காலியை எடுத்து அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளான். தாக்குதலில் காயமடைந்த அந்த ஆசிரியையும் அங்கிருந்து வெளியேறியுள்ளார். இந்தச் சம்பவம் பள்ளியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் மம்தா புகார் கொடுத்துள்ளார். மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில், “ஆசிரமத்தின் குளறுபடிகளை நான் தடுக்க நினைப்பது நிர்வாகத்தில் உள்ள முக்கிய நபர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் ஆசிரம நிர்வாகம் சிலகாலமாகவே எனக்குத் தொல்லை கொடுத்து வருகிறது” என்று தெரிவித்தார்.
மேலும் “இரண்டு நாட்களுக்கு முன்பு, நான் கழிவறையின் உள்ளே இருந்தபோது என்னை உள்ளேவைத்துப் பூட்டிவிட்டனர். இதுதொடர்பாக ஆசிரம நிர்வாகத்திடம் நான் புகார் செய்தபோது, மாணவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என எச்சரிக்கை விடுக்கும் வகையில் சொன்னார்கள். அதனையடுத்து தற்போது மீண்டும் இதுபோல தாக்குதலுக்கு ஆளாகியுள்ளேன்” என அவர் தெரிவித்தார்.
ஆனால், மம்தாவின் புகாரை பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. மேலும் மம்தா அடிக்கடி மாணவர்களை ‘அனாதை’ என திட்டுவாராம், இதனால் மாணவர்கள் கோபமடைந்திருப்பார்கள் எனக் கூறியுள்ளனர். ஆசிரியை மீது மாணவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.