சமீபகாலமாக இந்தியர்கள் பயன்படுத்திவரும் சமூக வலைதளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்றவற்றின் மீது பாதுகாப்பின்மை தொடர்பான பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்துவருகின்றன. கடந்த வாரத்தில் அடுக்கடுக்காக நடைபெற்ற இரண்டு நிகழ்வுகள் இந்திய மக்களிடையே சமூக வலைதளங்கள் மீது எரிச்சலை ஏற்படுத்தியது.
முதலாவது குற்றச்சாட்டு, இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெகாசுஸ் என்ற மென்பொருள் நிறுவனம் மூலம் இந்திய மக்களின் வாட்ஸ்அப் தகவல்கள் உளவு பார்க்கப்படுவதாகவும் அதற்கான உளவு மென்பொருட்களை தயாரித்து இந்தியாவில் உலவ விட்டதுமாக வெளிவந்த செய்தி.
அடுத்ததாக, ட்விட்டரில் இணைந்த சில நாட்களிலேயே அமித்ஷா மகன் ஜெய்ஷாவிற்கு மட்டும் ப்ளூ டிக் எப்படி வழங்கப்பட்டது என ட்விட்டர் பயனாளர்கள் கேள்வி எழுப்பினர். முன்னதாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டேவின் ட்விட்டர் கணக்கு இடைநீக்கம் செய்யப்பட்டது.
சஞ்சய் ஹெக்டேவின் பதிவு குறித்து ஒரு குறிப்பிட்ட பிரிவினர் புகார் அளித்ததே இத்தகைய நடவடிக்கைக்கு காரணம் என கூறப்பட்டது. ட்விட்டர் நிர்வாகத்தின் இத்தகைய நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து ட்விட்டரிலிருந்து வெளியேறுவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், ட்விட்டர் நிறுவனம் பயனாளர்கள் மத்தியில் சாதிய பாகுபாடு பார்ப்பதாக கூறி, #CancelAllBlueTicks என்கிற ஹேஷ்டேக் பயன்படுத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, ஒரு புதிய மாற்று சமூக ஊடகத்தை பயன்படுத்தவும் வலியுறுத்தி வருகின்றனர். அந்தவகையில் மஸ்டொடோன் என்ற சமூக வலைதளம் அறிய வந்திருக்கிறது.
ஜெர்மனியை சேர்ந்த யூகன் ரோஹ்கோ என்ற 26 வயது இளைஞரால் தொடங்கப்பட்ட சமூக வலைதளம் தான் மஸ்டொடோன். ட்விட்டர் போன்ற வசதிகள் கொண்ட இந்த சமூக வலைதளம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆகின்றன.
உலகம் முழுவதும் மாற்று சமூக வலைதளங்களை விரும்பும் பலரும் இந்த மஸ்டொடோனைப் பயன்படுத்திவருகின்றனர். இதன் மூலம் பாதுகாப்பாகவும் சுதந்திரமாக கருத்துகளை தெரிவிக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை நிர்வாகி பாலாஜி கூறுகையில், “தற்போது பெரும்பாலும் பயன்படுத்தப்படும் சமூக ஊடகங்கள் அனைத்தும் பெரும் முதலாளிகளால் உருவக்கப்பட்டு ஒற்றை நிர்வாக தன்மையுடன் இருக்கிறது. அதனால் எளிதில் அரசால் அந்த நிர்வாகிகளை கட்டுப்பட்டுத்தவோ, தங்களுக்கு சாதகமாக செயல்படுத்தவோ முடியும்.
அப்படி, தங்களுக்கு சாதகமாக செயல்படும் சமூக வலைதள நிறுவனங்கள் மூலம், அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்போரையும், மாற்றுக்கருத்து தெரிவிப்போரையும் அரசால் முடக்க முடியும்.
அப்படித்தான் சமீபத்தில், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே பதிவிற்கு எதிராக ட்விட்டர் அவர் பக்கத்தை முடக்கியது. இது எப்படி ஜனநாயகமாக இருக்கமுடியும்? நிறுவனத்தின் பாலிசிகள் எல்லாமல் எல்லோருக்கும் பொதுவானது எனக் கூறிவிட்டு ஒரு சிலருக்கு அதில் விலக்களிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
அதனால் தான் ஜனநாயகத்தன்மை இன்றி, வெறுப்புகளை விதைக்கும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளத்திற்கு மாற்றாக மஸ்டொடோன் என்றும் மாற்று சமூக வலைதளத்தை முன்வைக்கிறோம். இந்த வலைதளம் டோரண்ட் ( torrent) போன்றது. பயன்பாட்டாளர்களுக்கென ஒரு புதிய கம்யூனிட்டி சர்வர் அதில் அமைத்துக்கொள்ள முடியும்.
ஏற்கெனவே இருக்கும் கம்யூனிட்டிகளில் இருந்து நேரடியாக சர்வர் மூலம் சேரவும் இதில் வாய்ப்புள்ளது. அப்படி நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வரில் சேர்ந்த பின்னர் நமக்கான ஒரு பிரத்யேக பயனர் பெயர் (username) வைத்துக்கொள்ளலாம்.
அதுமட்டுமின்றி, ட்விட்டர் போல கருத்துகளை பதிவு செய்ய வழிவகை உள்ளது. பதிவுக்கு இத்தனை வார்த்தைகள்தான் என்ற வரம்பும் உண்டு. ட்விட்டரில் 280 கேரக்டர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும், ஆனால் இதில் 500 கேரக்டர்களை பயன்படுத்தலாம்.
மேலும், ட்விட்டரைப் போல வெறுப்பு வார்த்தைகளையும், தேவையற்ற அவதூறுகளையும் மஸ்டொடோனில் பரப்பமுடியாது. குறிப்பாக, பயன்பாட்டாளர்களை கண்காணிக்க முடியாது” எனக் கூறுகிறார்.