டிஜிட்டல் பண பரிமாற்றங்களை நொடிப்பொழுதில் செய்யக்கூடிய ஆப்களில் ஒன்று கூகுள் பே. டெபிட், க்ரெடிட் கார்ட் ஏதும் இல்லாத சமயத்தில் கூட இந்த கூகுள் பே மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. அவ்வப்போது பல ரிவார்ட்களையும் கூகுள் பே மூலம் பணம் ட்ரான்ஸ்ஃபர் செய்யும் போது கிடைக்கப் பெறுகிறது.
அந்த வகையில், தீபாவளியை முன்னிட்டு 5 ஸ்டாம்களை கலெக்ட் செய்தால் 251 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை பரிசு பெறலாம் என கூகுள் அறிவித்துள்ளது. இது ஒரு நபருக்கு 35 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்புதல், தீபாவளி பொருட்களை ஸ்கேன் செய்தல், ஏற்கெனவே உள்ள தீபாவளி ஸ்டாம்பை கிஃப்டாக அனுப்புதல் ஆகிய முறையின் மூலம் தீபாவளி ஸ்டாம்பை கலெக்ட் செய்யும் வகையில் புதிய திட்டத்தை கொண்டுவந்தது.
ஜும்கா, ஃப்ளவர், தியா, லேண்டெர்ன், ரங்கோலி இந்த ஐந்தும்தான் கூகுள் பே தீபாவளி ஸ்டாம்ப். இதில் முதல் 4 ஸ்டாம்கள் எளிதில் கிடைத்துவிட்டாலும் இறுதியாக உள்ள ரங்கோலி ஸ்டாம்ப் கிடைத்தால் மட்டுமே கூகுள் அறிவித்துள்ள பரிசை பெற முடியும். ஆனால் ரங்கோலி ஸ்டாம்ப் மட்டும் கிடைக்காமல் உள்ளதால் பயனாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த ஆஃபரை இன்று (அக்.,31) இரவு 11.59 வரை மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டதால் தீபாவளி முதற்கொண்டு இதுவரை பலர் இந்த ரங்கோலி ஸ்டாம்ப்க்காக அல்லல் பட்டு வருகின்றனர். சிலர் இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர்.
இதனையடுத்து இந்த ரங்கோலி ஸ்டாம்ப் கிடைக்காதது தொடர்பான மீம்ஸ்கள் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்து வருகிறது.
இதில் அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் கூகுள் பே-ன் இந்த தீபாவளி ஆஃபர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் கிடையாது என்பதுதான்.
பொதுவாக சமூக வலைதளங்களை உபயோகிப்போர் Terms and Conditionsஐ பார்ப்பதில்லை. இதனை கவனிக்காமல் இருந்ததாலேயே ரங்கோலிக்காக திண்டாடி வருகின்றனர்.