வைரல்

‘வாலிபரை கடத்திய பெண் இன்ஸ்பெக்டர்’:நூதன ஆசையால் வந்த வினை -அதிர்ச்சி தகவல்கள்! 

நாகர்கோயில் அருகே வாலிபர் ஒருவரை கடத்திய பெண் போலிஸ் இன்ஸ்பெக்டரும், 2 போலிஸ் ஏட்டுகளும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

‘வாலிபரை கடத்திய பெண் இன்ஸ்பெக்டர்’:நூதன ஆசையால் வந்த வினை -அதிர்ச்சி தகவல்கள்! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் குட்டி சரல்விளை என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஜெர்லின் (வயது 24). பொக்லைன் டிரைவராக பணி செய்துவந்த இவர் திடீரென பணக்காரர் ஆனார். சொந்தமான 2 கார்களை வாங்கி பவனி வந்தார்.

ஜெர்லினுக்கு தங்கப்புதையல் கிடைத்துள்ளதாகவும், அதில் கிடைத்த பணத்திலேயே ஜெர்லின் திடீர் பணக்காரராகி விட்டதாகவும் தகவல் பரவியது. இதுதொடர்பாக கருங்கல் போலீஸ் நிலையத்துக்கும் புகார்கள் சென்றது. போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் ஜெர்லினை மர்மகும்பல் ஒன்று வள்ளியூர் அருகே உள்ள பண்ணை தோட்டத்துக்கு கடத்திச் சென்றது. உனக்கு கிடைத்துள்ள தங்கப்புதையலில் எங்களுக்கும் பங்கு வேண்டும் என கேட்டு அவரை அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர்.

“அய்யய்யோ... எனக்கு புதையலும் கிடைக்கல, ஒண்ணும் கிடைக்கல. ஒருத்தரிடம் கடன் வாங்கிதான் கார்கள் வாங்கினேன்” என்றுச்சொல்லி ஜெர்லின் கெஞ்சியுள்ளார். இதனை நம்பாத அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அவரிடம் வெற்று வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கினர். மேலும் ஜெர்லினுக்கு சொந்தமான 2 கார்கள், அவர் அணிந்திருந்த 7½ பவுன் நகை ஆகியவற்றை பறித்து விட்டு அவரை அங்கிருந்து துரத்தி விட்டனர்.

அவர்களிடம் தப்பி வந்த ஜெர்லின், குளச்சல் ஏ.எஸ்.பி. கார்த்திக்கிடம் நடந்த விவரங்களை தெரிவித்தார். தான் கடத்தப்பட்ட விவகாரத்தில் கருங்கல் போலீசார் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்து இருந்தார். இதனால் ஏ.எஸ்.பி. கார்த்திக் விசாரணையை தீவிரப்படுத்தினார்.

ஜெர்லின் கடத்தப்பட்டது உறுதியானதால் அவரை கடத்தியதாக உதய மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்ற ஜெயராஜன், கப்பியறை வேளாங்கோட்டு விளையைச் சேர்ந்த ஸ்டாலின் என்ற ஜெயஸ்டாலின், மேக்காமண்டபம் கடமலைக்குன்று பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார், புத்தளத்தைச் சேர்ந்த சகோதரர்களான ராஜா அருள்சிங், ராஜா அஸ்வின், வெட்டூர்ணிமடம் பள்ளிவிளையைச் சேர்ந்த ஜெரின்ராபி, கிருஷ்ணகுமார் ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இவர்களில் சுரேஷ்குமார், கிருஷ்ணகுமார், ஜெரின் ராபி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜெர்லின் கடத்தல் விவகாரத்தில் கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்தேவி, ஏட்டுகள் ரூபன் ஜெயதிலக், ஜெரோன் ஜோன்ஸ் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

ஜெர்லின் கடத்தி வைக்கப்பட்டிருந்த வள்ளியூர் பண்ணை வீட்டுக்கு பெண் இன்ஸ்பெக்டர் சென்று வந்த விவரம் அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது. கைதானவர்களின் செல்போன் மற்றும் லேப்-டாப்பை ஆய்வு செய்தபோது அவர்கள் இன்ஸ்பெக்டருடன் அடிக்கடி பேசி வந்த விவரமும் தெரியவந்தது.

இதன் மூலம் ஜெர்லின் கடத்தல் விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் பொன் தேவிக்கு தொடர்பு இருப்பது உறுதியானது.

பொன்தேவி
பொன்தேவி

இதையடுத்து பொன்தேவி, சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். போலீசார் விசாரணைக்காக தேடுவதை அறிந்து தலைமறைவாகி விட்டார். இதனால் சஸ்பெண்டு உத்தரவை தூத்துக்குடியில் உள்ள அவரது வீட்டில் போலீசார் ஒட்டி விட்டு வந்தனர்.

இதேபோல ஏட்டுகளான ரூபன் ஜெயதிலக், ஜெரோன் ஜோன்ஸ் ஆகியோர் ஏற்கனவே கருங்கல் போலீஸ் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு சோதனைச்சாவடி பணிக்கு மாற்றம் செய்யப்பட்டு இருந்தனர். அவர்களும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்தது மட்டுமல்லாமல் வாலிபரை கடத்தி பணம் பறிக்கவும் முயன்ற குற்றத்துக்காக பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் 2 ஏட்டுகள் மீதும் கைது நடவடிக்கை பாயும் என தெரிகிறது. இதனால் பெண் இன்ஸ்பெக்டரும், ஏட்டுகளும் கோர்ட்டை அணுகி முன்ஜாமீன் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழக்கில் கைதாகி உள்ள சுரேஷ்குமார் உள்ளிட்டோர் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அவர்களில் சுரேஷ்குமார் நாகர்கோவில் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதனால் அவர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

ஆசிரியர் சுரேஷ் குமாருடன் இன்ஸ்பெக்டர் பொன்தேவி நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். தங்கப்புதையல் விவகாரம் கிடைத்ததும் சுரேஷ்குமாரும், இன்ஸ்பெக்டரும் கூட்டு சேர்ந்தே ஜெர்லினை கடத்திய விவரமும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்காக இவர்களாகவே ஒரு பெண் பெயரில் போலி புகார் ஒன்றை எழுதி கருங்கல் போலீஸ்நிலையத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த புகார் மனு விசாரணை நடத்த வேண்டும் என்ற பெயரில் ஜெர்லின் வீட்டுக்கு ஏட்டுகளை அனுப்பி இன்ஸ்பெக்டர் மிரட்டி உள்ளார். அதைத்தொடர்ந்தே கடத்தல் நாடகம் அரங்கேறி உள்ளது.

கிடைக்காத புதையலுக்காக வாலிபரை கடத்திய பெண் இன்ஸ்பெக்டர் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவரத் தொடங்கி இருக்கின்றன.

banner

Related Stories

Related Stories