ஏ.டி.எம் கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஸ்கிம்மர் கருவி பயன்படுத்தி ஏ.டி.எம்-மில் உள்ள பணத்தை கொள்ளையடித்தல், போலி ஏ.டி.எம் கார்டு உபயோகித்து பணம் கொள்ளையடித்தல் என பல்வேறு வழிகளில் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இதுமட்டுமல்லாமல், ஏ.டி.எம் மிஷினையே கொள்ளையடித்துச் செல்லும் விநோத சம்பவங்களும் நடைபெற்றதுண்டு. அந்த வகையில் வடக்கு அயர்லாந்து நாட்டில் உள்ள டன்கிவன் நகரில் உள்ள ஏ.டி.எம் மிஷினை ஜேசிபி வாகனத்தின் மூலம் பெயர்த்தெடுத்து தூக்கிச் சென்றுள்ளனர் கொள்ளையர்கள்.
ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள பணம் பெட்டியின் அளவுக்கு அவர்கள் கொண்டு வந்த காரின் மேற்புறத்தில் துளையிட்டு அதில் ஜேசிபியின் உதவியின் மூலம் எடுத்துச் சென்றுள்ளனர். இந்த ஏடிஎம் கொள்ளையில் மூன்று பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டதும், இயந்திரத்தை உடைத்து எடுத்துச் சென்றது என அனைத்தும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
மூவருமே முகத்துக்கு மாஸ்க், கையுறைகள் மற்றும் உடல் முழுவதும் மறைக்கக் கூடிய வகையிலான ஆடைகளை அணிந்துக்கொண்டு இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் 7ம் தேதி நடந்துள்ளது. ஆனால் சமீபத்தில்தான் இந்த காணொளி வெளியாகி வைரலாகியுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவிலும் பல்வேறு வகையில் ஏடிஎம், வங்கி, நகைக்கடை என பல்வேறு இடங்களில் கொள்ளைச் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதாலும், இந்த காணொளியை பார்த்ததும் நெட்டிசன்கள் பலர் இந்த வழிமுறையையும் இந்தியாவில் உள்ள கொள்ளையர்களும் பயன்படுத்தக் கூடும் என கிண்டலடித்து பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, அண்மையில் திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரியிலும் இதேபோன்று திட்டமிட்டு கோடிக்கணக்கான நகைகளை திருவாரூர் முருகனின் கொள்ளைக் கும்பல் சூறையாடிச் சென்றது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.