நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது. அப்படி கொண்டாடும் பகுதிகளில் கொலு பொம்மைகள் வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சில இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக சந்திரயான் விண்கலத்தைப் போற்றும் வகையிலும் இஸ்ரோ விஞ்ஞானிகளைப் பாராட்டும் வகையில் வாரணாசியில் ஒரு கொலு பந்தலில் சந்திரயான்-2 கொலு பொம்மை அமைக்கப்பட்டுள்ளது.
100 அடி உயரத்திற்கு அந்த கொலு பொம்மை அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில், இஸ்ரோ தலைவர் கே.சிவனின் மாதிரி பொம்மை, விண்வெளி உபகரணங்கள் மற்றும் விண்வெளி வீரர்களின் மாதிரி பொம்மைகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.
மேலும், அடுத்ததாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் திட்ட மாதிரிகளையும் வைத்துள்ளனர். இஸ்ரோவின் முயற்சிகளைக் கொண்டாடும் வண்ணம் இந்த பந்தலை அமைந்துள்ளதாக அதன் ஏற்பாட்டாளர் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, செல்போன் கதிர்வீச்சு மூலம் பறவைகளுக்கு ஏற்படும் தீங்கு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொம்மைகள் இடம்பெற்றுள்ளன.
பல இடங்களில் சாலை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்தும் கொழு பொம்மைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற கொலு பொம்மைகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.