அமெரிக்காவைச் சேர்ந்தவர் மைக்கேல் பென்னட். 26 வயதான மைக்கேல், நக்கட்நாகின் - nuggetnoggin என்ற யூ-ட்யூப் சேனல் ஒன்றை நடத்திவருகிறார். அந்த யூ-ட்யூப் சேனலை சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.
அவரது 12வது பிறந்தநாளுக்கு அவரது பெற்றோர் பரிசாகக் கொடுத்த மெட்டல் டிடெக்டரைக் கொண்டு, பொக்கிஷத் தேடல் என்ற பெயரில் நதிகளில் மூழ்கியிருக்கும் பொருள்களைத் தேடும் முயற்சியில் இறங்கினார். பின்னர் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள எடிஸ்டோ நதியில் ஏராளமான பொருட்களைக் கண்டறிந்தார்.
குறிப்பாக, சுற்றுலா பயணிகள் தொலைத்த மோதிரம், வாட்ச் மற்றும் ஐபோன்கள் போன்றவற்றை தேடி கண்டுபிடித்து அந்த பொருள்களின் உரிமையாளர்களிடம் சேர்த்துள்ளார். அதுபோல கடந்த 26-ம் தேதி தனது வழக்கமான பணியில் மைக்கேல் ஈடுபட்டிருந்தார்.
அப்படி நதியில் மூழ்கி தனது தேடலை தொடங்கியபோது, ஒரு ஐபோன் பிளாஸ்டிக் கவரின் உள்ளே படிந்து கிடந்தது. பின்னர் அதனை எடுத்துவந்து ஆன் செய்துள்ளார் மைக்கேல். அதில் பாஸ்வேர்ட் போடப்பட்டிருந்தால் அதன் சிம் கார்டை கழற்றி, வேறு போனில் போட்டு அதன் உரிமையாளர் எரிகா பென்னட் என்பவரை தொடர்புகொண்டார்.
பின்னர் ஐபோன் உரிமையாளரிடம் நேரில் சென்று ஒப்படைத்துள்ளார். தொலைந்த ஐபோன் கிடைத்த மகிழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் உற்சாகம் அடைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து ஐபோன் உரிமையாளர் கூறுகையில், “கடந்தாண்டு ஜூலை 19ம் தேதி குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது நதியில் தொலைந்துவிட்டது. அதனால் ஒருமாதம் கவலையாக இருந்தேன்.
ஆனால் தற்போது மைக்கேல் பென்னட் அந்த போனைக் கண்டிபிடித்துக் கொடுத்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த போன் கிடைக்கும் என கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தச் நிகழ்வு அனைத்தையும் வீடியோவாக எடுத்து அவரது சேனலில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. மேலும் பலர் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.