பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தமிழகத்துக்கு வருகை புரியும்போதும் அவருக்கு எதிரான கண்டனக் குரல்கள் எழுவது தொடர்ந்து வருகிறது.
அந்தவகையில் சென்னை ஐஐடியின் 56வது பட்டமளிப்பு விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்துள்ள மோடிக்கு வழக்கம்போல தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பலை வீசி வருகிறது.
அதற்கு உதாரணமாக ட்விட்டரில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. #GobackModi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகிறது என்றால் மோடி தமிழகத்துக்கு வந்துள்ளார் என்றே அர்த்தம் எனவும் பதிவிடப்பட்டு வருகிறது.
மோடியின் வருகையைக் காட்டிலும் அவருக்கு எதிராக பதிவிடப்படும் #GobackModi என்ற வாசகம் பலதரப்பட்ட மக்களால் வரவேற்கப்படுகிறது.
இது மோடி என்ற ஒற்றை மனிதருக்கு எதிரானது மட்டும் இல்லாமல், சர்வாதிகாரப் போக்கை கொண்டுள்ள ஒரு இயக்கத்துக்கும், தமிழின விரோதப் போக்கைக் கொண்டுள்ள மத்திய அரசுக்கும் எதிரான முழக்கமாகவே பார்க்கப்படுகிறது. அவ்வாறே சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது.
மேலும், எப்போதெல்லாம் மோடி தமிழகம் வருகிறாரோ அப்போதெல்லாம் #GoBackModi என்ற வாசகத்தை ட்ரெண்ட் செய்வதை ஒரு தலையாய கடைமையாகவே தமிழர்கள் பார்ப்பதாகவும் பதிவிடப்படுகிறது.