சமீபகாலமாக நட்சத்திர விடுதிகளில் வழங்கப்படும் உணவு பொருட்கள் நூறு மடங்கு விலை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் நட்சத்திர விடுதிகளில் வழங்கப்படும் உணவுகள் தரமற்ற முறையில் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
நடிகை மீரா சோப்ரா, தமிழில் நிலா என்ற பெயரில் எஸ்.ஜே சூர்யாவின் 'அன்பே ஆருயிரே' படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதனையடுத்து ஒரு சில தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்த இவர், தமிழில் வாய்ப்பு குறைந்ததால் தற்போது பிற மொழி படங்களிலும் தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் அகமதாபாத்தில் ’டபுள் ட்ரீ ஹில்டன்’ என்கிற பிரபல நட்சத்திர விடுதி தங்கியுள்ளார். அங்கு அவருக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிலா இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தற்போது அகமதாபாத்தில் உள்ள டபுள் ட்ரீ ஹில்டன் என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளேன். இங்கு ரூம் சர்வீஸ் மூலம் உணவுக்கு ஏற்பாடு செய்தேன். அவர்கள் எனக்கு வழங்கிய உணவில் புழுக்கள் இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
பொதுவாக வெளியில் சென்று தங்கும்போது நல்ல உணவுகளுக்காக அதிக கட்டணம் செலுத்தி தங்குகிறோம். ஆனால் இங்கு புழுக்கள் உள்ள உணவைத் தருகிறார்கள். முன்னதாக ஏற்பட்ட உடல் நிலை பாதிப்புகளுக்கும் இதுதான் காரணம் என நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஏற்கனவே, வாழைப்பழங்களுக்கு ஜி.எஸ்.டி வரியோடு ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலித்தது, வேக வைத்த முட்டைக்கு 400 ரூபாய் பில் போட்டது என சமீபகாலமாக 5 நட்சத்திர விடுதிகள் சர்ச்சையில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.