கர்நாடகா மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, ஒரு பெட்ரோல் பம்ப் உரிமையாளர் அவினாஷ் மற்றும் அவரது தாயார் நவரத்னா ஆகியோர் இணைந்து, தேவைப்படுபவர்களுக்கு உணவு, உடைகள் மற்றும் பிற பொருட்களை சேகரித்து விநியோகிக்க தங்கள் பம்பில் ஒரு பெரிய அலமாரியை நிறுவினர்.
அந்த அலமாரிக்கு ‘மக்கள் சுவர்’ என்று பெயரிட்டுள்ளனர். சமூக நலன் கருதும் இந்த தனித்துவமான முயற்சி உள்ளூர் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த சுவரில் மற்றவர்களுக்கு பயனளிக்கும் உணவுப் பொருட்களையும், துணி மணிகளையும், வீட்டு உபயோகப் பொருட்களையும் யார் வேண்டுமானாலும் கொண்டு வந்து வைக்கலாம். இதற்கான பயன்பாடு உள்ளவர்கள் இவற்றை எடுத்துக் கொள்ளலாம். இந்த மக்கள் சுவற்றினை பெரும்பாலான பாதிக்கப்பட்ட மக்கள் பயன்படுத்தி பயனடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் அவினாஷின் தாயார் நவரத்னா கூறுகையில், "மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் என் மகனிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது பங்கை அளிக்க அவர் விரும்பினார்.
எனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு பொருட்களை மக்கள் நன்கொடையாக வழங்குவதற்காக பம்பிற்கு அடுத்ததாக ஒரு அலமாரியை நிறுவ திட்டமிட்டோம். அதன்படி மக்களின் சுவரை அமைத்துள்ளோம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இங்குள்ள பொருட்களை பயன்படுத்துகின்றனர்” என்று பெருமிதத்தோடு கூறுகிறார்.
நவரத்னாவின் நண்பர் சவிதா குமார் கூறும்போது, "35 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் மக்கள் வெள்ளத்தால் இதுபோன்ற நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். மக்கள் சுவர் முயற்சி, வீடுகளில் அடிப்படை பொருட்கள் இல்லாத பலருக்கு மிகவும் உதவியாக இருக்கும்,
இப்போது பலர் எதிர்கொள்ளும் நெருக்கடியைச் சமாளிக்க அவினாஷ் மற்றும் நவரத்னா போன்ற அதிகமானவர்கள் சமுதாயத்திற்காக தேவை. மக்களுக்காக இந்த நடவடிக்கை எடுத்ததற்காக நான் அவளை (நவரத்னா) மிகவும் பாராட்டுகிறேன்" என்று கூறினார்.
மக்கள் சுவற்றை பயன்படுத்திக் கொண்ட பயனாளி தேவி கூறுகையில், “எங்கள் வீடுகளில் எங்களுடன் அதிக உணவு இல்லை என்பதால் இது மிகவும் உதவியாக இருக்கிறது. அலமாரியில் இருந்து, நான் ஒரு பாக்கெட் ரொட்டி மற்றும் சில துணிகளை என் குடும்பத்திற்காக எடுத்துள்ளேன். ஏழைகளுக்கு உதவியவர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
“இந்த வசதியை மாவட்டத்தில் உள்ள பல்வேறு மக்களும் பயன்படுத்துகின்றனர். இது மிகவும் நல்ல முன்முயற்சியாகும், இது ஏழைகளுக்கு உதவும் ”என்று குடியிருப்பாளரான அப்தாப் என்பவர் கூறுகிறார்.
மக்களுக்கு சேவை செய்ய நாடெங்கிலும், ‘மக்கள் சுவர்’ அமைந்தால் நல்லதுதானே..!