ஜி.எஸ்.டி வரி வசூலிக்கும் நடவடிக்கைக்கு பிறகு மக்களிடன் அடிப்படைத் தேவைகளுக்குப் பயன்படுத்தும் பல பொருட்களின் விலை உயர்ந்ததால், மக்கள் மிகுந்த சிரமங்களைச் சந்தித்தனர். குறிப்பாக பெண்கள் பயன்படுத்தக் கூடிய சானிட்டரி நாப்கின் விலையும் உயர்ந்தது.
மாதவிடாய் காலங்களில் இன்னமும் பெண்கள் சரியான நாப்கின் வசதி இல்லாமல் தவித்து வந்த நிலையில், டெல்லி ஐ.ஐ.டி மாணவர்கள் வாழை நாரில் இருந்து தயாரித்து சானிட்டரி நாப்கின் தயாரித்துள்ளனர். இந்த சானிட்டரி நாப்கினை 120 முறை பயன்படுத்தலாம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஐ.ஐ.டி டெல்லி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உதவியுடன் ‘சான்பே’ என்ற தொழில்முனைவு நிறுவனம் இந்த நாப்கினைத் தயாரித்துள்ளது. தற்போது காப்புரிமை பெறுவதற்காக அனுமதி கோரியுள்ளது.
இதுகுறித்து சான்பே நிறுவனத்தின் அதிகாரி ஆர்சிட் அகர்வால் கூறுகையில், “பெரும்பாலும் இன்று சந்தைகளில் விற்கப்படும் சானிட்டரி நாப்கின்கள் செயற்கைப் பொருட்களைக் கொண்டுதான் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
இதனால் அது மக்குவதற்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாகும். மேலும் பலர் இதை முறையாக அப்புறப்படுத்தாமல் விட்டுவிடுவதால் தொற்று நோய் ஏற்படும் பாதிப்பும் உள்ளது.
மேலும் நாப்கினை எரிப்பதனால் புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்கள் வெளிபடுகிறது. அதே நேரம் இதன் விலையும் அதிக அளவில் உள்ளது. இதனைக் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் எங்கள் நிறுவனம் வாழை நாரில் நாப்கின் தயாரிக்க முடிவு செய்தோம். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
அதுமட்டுமின்றி இந்த நாப்கின்கள் 2 ஆண்டுகள் வரை இருக்கும், இவற்றை 120 முறை வரை மீண்டும் பயன்படுத்தலாம். மேலும் 199 ரூபாய்க்கு இரண்டு நாப்கின்கள் விற்க உள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.