உத்தர பிரதேசத்தின் பிதூர் பகுதியை சேர்ந்த போலிஸார் ராஜேஷ் சிங் மற்றும் சுனில் குமார் இருவரும் ரோந்துப்பணிக்கு சென்றுள்ளனர். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பானது. இதனால் அதிர்ச்சி அடைந்த மற்றொரு போலிஸ்காரர் இருவரையும் தடுக்க முயற்சி செய்தார்.
ஆனால், நீண்ட நேரமாக இரண்டு போலிஸாரும் கட்டிப் புரண்டனர். மோதல் அதிகமானதைத் தொடர்ந்து அங்கிருந்த வாகன ஓட்டிகள் சண்டையிட்டுக்கொண்ட போலிஸாரை விலக்கி வைத்தனர். இதனை அப்பகுதியில் இருந்த வாகன ஓட்டி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
பின்னர், போலிஸாரிடம் எதற்காகச் சண்டை என்று விசாரித்தபோது வாகனத்தின் முன் சீட்டில் யார் அமர்வது என்ற பிரச்னையில் இந்த சண்டை ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ந்துபோன மற்றொரு போலிஸ் அதிகாரி இருவரின் செயல் குறித்து உயரதிகாரிக்கு தகவல் கொடுத்தார்.
மேலும், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து காவல்துறை உயரதிகாரி, நடுரோட்டில் சண்டையிட்ட இரண்டு போலிஸார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதேபோல கடந்த வாரம் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த காவலர்கள் இருவர் லஞ்சம் வாங்குவதற்காக சண்டையிட்டுக் கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.