நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் அமராவதி. இவரது இரண்டாவது மகள் அபி மரணம் அடைந்து விட்டதாக ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதைக்கண்ட அபியின் கணவர் சந்தோஷ் போஸ்டரில் உள்ள பிரின்டிங் ப்ரஸ்ஸிற்கு போன் செய்து விசாரித்துள்ளார். அப்போது அபியின் தாயே அபி மஞ்சள் காமாலையால் உயிரிழந்து விட்டதாக கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அச்சடிக்க சொல்லியதாக விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து அபியின் கணவர் சந்தோஷ் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பின்னரே அபியின் தாய் அமராவதி இவ்வாறு போஸ்டர் ஒட்டியதற்கான காரணம் வெளிவந்துள்ளது.
அமராவதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூத்த மக்களுக்கு ஏற்கனவே திருமணம் செய்துவைத்துள்ளார். இரண்டாவது மகளான அபி கல்லூரியில் படித்து வந்தார்.அபி தனது பக்கத்துக்கு வீட்டில் வசித்து வந்த சந்தோஷை காதலித்து வந்துள்ளார்.
சந்தோஷின் நடவடிக்கை பிடிக்காததால் மக்களின் காதலை ஏற்க அமராவதி ஏற்க மறுத்துள்ளார். இதனால், இரு குடும்பத்திற்கும் அடிக்கடி சண்டை ஏர்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தோஷ் குடும்பத்தினர் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தனர். இந்நிலையில், அபி தன் தாயின் எதிர்ப்பை மீறி சந்தோஷை திருமணம் செய்து கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அமராவதி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அச்சடிக்க சொல்லியது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பேசிய அபியின் தாய் அமராவதி, சந்தோஷிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் அபி அவனை திருமணம் செய்ததால் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அச்சடித்ததாக தெரிவித்தார். மேற்கொண்டு எதுவும் பேசவில்லை என தெரிவித்தார்.
உயிருடன் உள்ள மகளுக்கு பெற்ற தாயே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அச்சடித்த விவகாரம் திசையன்விளை பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.