கேரளாவில் கடந்தாண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், கடவுளின் சொந்த தேசம் ஏகப்பட்ட இன்னல்களை சந்தித்தது. அதில் இருந்தே இன்னமும் கேரளா மீளவே இல்லை. தொடர் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநிலத்தின் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால், வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க கேரள மக்கள் அண்டை மாநிலங்களுக்கு வேலைக்கு சென்ற அவலம் எல்லாம் அரங்கேறியது. ஆட்சியில் இருந்த மத்திய பா.ஜ.க அரசும் கேரளாவிற்கு உதவ முன்வரவும் இல்லை. உதவி வழங்க முன்வந்த நாடுகளுக்கு அனுமதியும் கொடுக்கவில்லை. இதனால், அம்மாநில முதல்வரே முன் நின்று நிதி திரட்டும் பணியை மேற்கொண்டார்.
தமிழகத்தில் இருந்து ஏரளாமான நிவாரணப் பொருட்களும், நிதி உதவியும் சென்றது. இந்த பெரும் சேதாரத்தின் வடு மறையாத சூழலில் மீண்டும் ஒரு கனமழைக் கேரளாவை சிதைத்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பெரும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.
பெரும் மழையால் சுமார் 150 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 90 பேர் பலியாகியிருப்பதாகவும், 58 பேர் காணவில்லை என்றும் தகவல் வெளிவந்துள்ளது. மலப்புரம், வயநாடு உட்பட 8 மாவட்டங்களில் அதிகளவில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கேரளா முழுவதும் 1,621 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாம்களில் 74 ஆயிரத்து 400 குடும்பங்களை சேர்ந்த சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் தஞ்சம் புகுந்துள்ளனர்.
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. இதனிடையே கனமழை முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டு கண்ணூர், காசர்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தங்க இடமில்லாமல், உண்ண உணவில்லாமல் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இவ்வளவு மோசமான நிலையில் உருக்குலைந்த கேரளாவை மத்திய அரசு கவனிப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மழைவெள்ளத்தால் வாழ்வதாரத்தை இழந்த மக்களுக்கு அண்டை மாநிலங்களில் இருந்து உதவிக்கரம் நீண்டு உள்ளது.
அதிலும் குறிப்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் உள்ள தி.மு.க தொண்டர்கள் கேரள மக்களுக்காக நிவாரணப் பொருட்கள் திரட்டி வழங்க உத்தரவிட்டுள்ளார். கேரள மக்களே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்வதால் பா.ஜ.க -ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு நிவாரணப் பெருட்கள், பணம் அனுப்பாதீர்கள் என்று சமூக வலைதளங்களில் பொய் பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த வருடம் கேரளாவில் பெய்த மழையால் அதிகமாக பாதிக்கப்பட்டது வயநாடு மாவட்டத்தில் புத்துமலை, மேப்பாடி பகுதிகளும், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பூதானம், கவளப்பாரை பகுதிகளும்தான்.
இந்த அதிர்ச்சில் இருந்து அந்த ஊர் மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை. தற்போது அரசு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள அந்தப் பகுதி மக்களை சந்தித்தேன். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தார்க்கும் முடிந்த அளவு உதவி செய்ய கேரள அரசு முயன்றுவருகிறது.
செவ்வாய்கிழமை மாலை வரைக்கும் 91 நபர்கள் உயிரிழந்துள்ளார்கள். 1,243 அரசு முகாம்களில் 2,24,506 மக்கள் தங்கிவருகிறார்கள். நூற்றாண்டு கண்ட பெருவெள்ளம் வந்து ஒரு வருடம் மட்டுமே ஆன நிலையில், இந்த பேரழிவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
UN மதிப்பீட்டின் பிரகாரம் இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு 31,000 கோடி ரூபாய் தேவை. இந்த சூழ்நிலையில், கேரளாவுக்கு உதவி தேவையில்லை என்று சில நபர்கள் பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள். இது எங்களை மிகவும் வேதனைப்படுத்துகிறது.
கேரள மக்களுக்கு உங்களின் உதவிகள் மிகத் தேவை. சிறிது, பெரிது என்ற வேறுபாடு இல்லை. முடிந்த அளவுக்கு உதவுங்கள்” என குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவுக்கு தமிழக மக்கள் நம்பிக்கை அளித்து பகிர்ந்து வருகின்றனர். அதே சமயம் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் கும்பல்களை கண்டித்தும் பதிவிட்டு வருகின்றனர். மக்களின் வேதனையிலும் அரசியல் செய்யத்துடிக்கும் காவி கும்பலின் உண்மையான நிறம் இதுதான் என்றும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.