கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான ‘விஸ்வரூபம்’ படத்தில் வில்லனாக நடித்தவர் பாலிவுட் நடிகர் ராகுல் போஸ். இவர் நிறைய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் சண்டிகரில் உள்ள ‘ஜே டபிள்யூ’ என்ற நட்சத்திர விடுதியில் ராகுல் போஸ் தங்கியுள்ளார்.
அங்குள்ள உணவகத்தில் மதிய உணவுக்காக, இரண்டு வாழைப்பழங்கள் ஆர்டர் செய்திருக்கிறார். அப்போது வாழைப்பழத்துடன் வந்த ‘பில்’லை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதற்கான காரணத்தை வீடியோவாக தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் போஸ் பதிவிட்டுள்ளார்.
அந்த ட்வீட்டில், “நீங்கள் இதனை நம்பித்தான் ஆகவேண்டும். வாழைப்பழம் விலை குறைவு என்று யார் சொன்னது ?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் அந்த வீடியோவில் தான் கட்டிய ஹோட்டல் பில்லையும் காட்டியுள்ளார்.
இது சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இந்த நட்சத்திர விடுதிக்கு தற்போது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இனி இதுபோல பல விடுதிகள் அநியாயக் கட்டணத்தை வசூல் செய்யும் என பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் ஜி.எஸ்.டி வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு வரி வசூலித்தக் குற்றத்திற்காக ஜே டபிள்யூ மாரியட் நட்சத்திர விடுதிக்கு கலால் மற்றும் வரிவிதிப்பு துறை அதிகாரிகள் ரூ.25 ஆயிரம் அபராதம் வித்தித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இதுபோல நாடு முழுவதும் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு வசூலிக்கும் விடுதிகள், ஹோட்டல்கள் போன்றவற்றில் ஆய்வு நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.