மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ளது. இந்த நாக்பூரில், ராஷ்ட்டிர சந்த் துகாதோஜி மகராஜ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இளங்கலை மற்றும் முதுகலை பாடங்கள் இங்கு கற்பிக்கப்படுகின்றன. மேலும் ஆயிரக்கணக்கானோர் இங்கு படித்து வருகின்றனர்.
இந்நிலையில், துகாதோஜி மகராஜ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை, இளங்கலை பட்டப் படிப்பிற்கான நான்காவது பருவத்திற்கு புதிய பாடங்களை இணைந்துள்ளது. அதில், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நாட்டுப்பணி என்ற பெயரில் சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
முன்னதாக , 2003-04ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் குறித்த அத்தியாயம் முதுகலை வரலாற்றுப் பாடத்தில் சேர்க்கப்பட்டது. அதனையடுத்து தற்போது இளங்கலை வரலாற்றுப் பாடத்திலும் ஆர்.எஸ்.எஸ் குறித்த பாட புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
இதுகுறித்து, மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் சாடியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, “ஆர்.எஸ்.எஸ் பற்றி பாடம் வைப்பது தவறில்லை, அது நாட்டுப்பணி செய்ததாக எழுதி வைத்திருப்பதுதான் தவறு. துகாதோஜி மகராஜ் பல்கலைக்கழகத்திற்கு, ஆர்.எஸ்.எஸ் செய்த நாட்டுப்பணி குறித்த விவரங்கள் எங்கிருந்து கிடைக்கும்? என கேலி செய்துள்ளார்.
மேலும்,பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இருந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, நாட்டின் விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த அமைப்பாகும், அதுமட்டுமல்ல, சுமார் 52 ஆண்டுகள் நாட்டின் தேசியக் கொடியையே தீண்டத்தகாததாக ஆர்.எஸ்.எஸ் வைத்திருந்தது. நமது அரசியலமைப்புச் சட்டத்தையும் அது ஏற்றுக் கொள்ளவில்லை” என அவர் அதில் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வற்புறுத்தலின் படியே இந்த மோசடி திருப்புவாத சம்பவம் நடைபெற்றிருக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றார்.