பா.ஜ.க-வினர் சர்ச்சைகளில் சிக்குவது ஒன்றும் புதிதல்ல, பா.ஜ.க-வைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தலைவர்கள் என தொடர்ந்து ஏதாவது ஒருவகையில் சர்ச்சையில் சிக்கிக் கொண்டே இருக்கிறார்கள். அதனை அவர்கள் விளம்பர உத்தியாகக் கையாள்வதாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர், பிரணவ் சிங் சாம்பியன். பா.ஜ.க எம்.எல்.ஏ-வான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் பத்திரிகையாளர் ஒருவரை மிரட்டியதாக சர்ச்சையில் சிக்கினார். இதனால், பா.ஜ.க தலைமை அவரை கட்சியிலிருந்து இடைநீக்கமும் செய்தது.
இதனிடையே காலில் அறுவை சிகிச்சை செய்ததால் வீட்டில் ஓய்வில் இருப்பதாக கூறப்பட்ட பிரணவ், உயர் ரக துப்பாக்கிகளை கையில் வைத்துக்கொண்டு கையில் கண்ணாடி கிளாசில் வைத்து மது அருந்தியபடி நடனமாடியது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், பலரும் பா.ஜ.க எம்.எல்.ஏ-வுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு எம்.எல்.ஏ-விடம் எப்படி இத்தனை துப்பாக்கிகள் இருக்கின்றன என்றும் பலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர். பிரணவ் சிங்கின் ஆட்டம், காவல்துறையின் பார்வைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும் பா.ஜ.க எம்.எல்.ஏ-வை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும். அவரது பதவியைப் பறிக்கவேண்டும் என உத்தரகாண்ட் எதிர்க்கட்சியினர் வலிறுத்தி வருகின்றனர்.