உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவர் அமேசான் நிறுவனர் ஜெஃப் பேஸோஸ். ஆன்லைன் வணிக நிறுவனத்தில் அமேசான் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. 1994ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்றளவும் உலக மக்கள் தேர்ந்தெடுத்த ஆன்லைன் வர்த்தக தளமாக உள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்த மைக்ரோ சாஃப்டின் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி முதல் பணக்காரராக மாறியவர் ஜெஃப் பேஸோஸ். இவர் அமேசான் நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பே 1993ம் ஆண்டு எழுத்தாளரான மெக்கன்ஸியை மண முடித்தார். இவர்கள் இருவருக்கும் 4 குழந்தைகள் உள்ளன.
அமேசானின் பங்குதாரர்களாக உள்ள இருவருக்கும், சமீபத்தில் வந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்தனர். அதனையடுத்து நேற்று ஜெஃப் பேஸோஸ் மற்றும் மெக்கன்ஸிக்கு விவாகரத்து வழங்கப்பட்டது.
இந்நிலையில், அமேசானின் 2.64 லட்சம் கோடி மதிப்புள்ள 4 சதவிகித பங்குகளை மெக்கன்ஸிக்கு வழங்கினார் ஜெஃப் பேஸோஸ். அதேப்போல், வாஷிங்டனில் உள்ள போஸ்ட் நாளிதழ் மற்றும் ப்ளூ ஆரிஜின் என்ற விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் இருந்து தனது பங்குகளை கணவர் ஜெஃப் பேஸோஸ்க்கு விட்டுக்கொடுக்கவும் முன்வந்துள்ளார்.
அமேசானின் பங்குகள் வருவதன் மூலம் உலகப் பணக்கார பெண்கள் பட்டியலில் மெக்கன்ஸி இடம்பெறுவார். மேலும், ஜீவனாம்சமாக வரும் தொகையில் பாதியை தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கவும் மெக்கன்ஸி முடிவெடுத்திருக்கிறார்.
மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கிய பின்னரும் ஜெஃப் பேஸோஸின் சொத்து மதிப்பு 8 லட்சம் கோடியே 14 ஆயிரமாக இருப்பதால் அவரே உலகின் முதல் பணக்காரராக நீடிக்கிறார் என்பதும் கூடுதல் தகவல்.